மதுரை வடக்கு தொகுதியை குறி வைக்கும் காங்கிரஸ் - மாணிக்கம் தாகூர் எம்பி பேட்டி

மதுரை வடக்கு தொகுதியை குறி வைக்கும் காங்கிரஸ் - மாணிக்கம் தாகூர் எம்பி பேட்டி

மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது. இதற்காக கூட்டணியில் அந்த தொகுதியை காங்கிரஸ் கட்சி கோரும். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ''இந்தியா சுதந்திரம் அடைந்து ஐந்து மாதத்திற்கு உள்ளாக இதே நாளில் மகாத்மா காந்தியை வெறுப்பு அரசியல் வீழ்த்தியது. குறிப்பாக ஆர்எஸ்எஸின் சித்தாந்த அரசியல் மகாத்மா காந்தியை மூன்று குண்டுகளால் சுட்டு வீழ்த்திய நாள் இது. இந்து மகா சபை, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் தொடர்ந்து வெறுப்பு அரசியலை பல வகையில் கடந்த 76 ஆண்டுகளாக நாட்டில் செய்து வருகின்றன. இதனை எதிர்க்க வேண்டிய காலகட்டம் வந்திருக்கிறது.

ராகுல் காந்தி இதனை எதிர்த்து தான் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நான்காயிரம் கிலோ மீட்டர் நடந்து பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டார். மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட இந்த நாளை, வருங்கால சந்ததியினருக்கு வெறுப்பு அரசியலின் ஆபத்தையும், அதனால் இந்தியாவின் ஒருமைப்பாடு துண்டாடப்படும் என்பதை எச்சரிக்கும் வகையில் பார்க்கிறேன்.

தமிழ்நாடு தேர்தல் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஜனவரி 17 ஆம் தேதி டெல்லியில் 39 காங்கிரஸ் தலைவர்களை அழைத்து என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டறிந்தது. அதற்கு முன்பு டிசம்பர் 3 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் கார்கே, குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். அந்தக் குழு முதல்வரை சந்தித்து காங்கிரஸ் கட்சியின் நிலையை எடுத்துச் சொன்னது.

இரண்டு நாட்களுக்கு முன்பு திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அவர்களுக்கிடையிலான சந்திப்பு குறித்து அவர்கள் வெளியே எதுவும் சொல்லவில்லை. அவர்கள் என்ன சொல்கிறார்களோ அப்போது தான் நமக்கு தெரியும். அதுவரை கற்பனை கதைகளாக தான் இருக்கும். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக உள்ளது, காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை கட்சி தலைமை நியமித்த குழு பேச்சுவார்த்தை நடத்தும்.

மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சி கோரும். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் கட்சியை பொறுத்த அளவில் மதுரை வடக்கு தொகுதியை கேட்டு பெற வேண்டும் என்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரை சந்தித்து பேசினேன். என்னை பொறுத்த அளவில் காங்கிரஸ் கட்சியை யாரெல்லாம் அவமானப்படுத்துகிறார்களோ? யாரெல்லாம் இழிவாக பேசுகிறார்களோ? அவர்களிடம் எந்தவித தயவு தாட்சண்யமும் பார்ப்பதற்கு இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு தன்மானம் மிக முக்கியம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஒரு நீண்ட பதிவை வெளியிட்டிருந்தார். அதில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களை இழிவுபடுத்துவதையோ, அவமதிப்பதையோ எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அமைப்புரீதியாக 85 சதவீதம் முழுவதுமாக சீரமைத்திருக்கிறோம். அமைப்புரீதியாக தற்போது பலம் சேர்க்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது செல்வபெருந்தகையின் அறிக்கை தான் காங்கிரஸ் கட்சியின் நிலை.

எனக்கும், சகோதரி ஜோதிமணிக்கும் சீட்டு கிடைப்பது காங்கிரஸ் தலைமை முடிவெடுக்க வேண்டிய விஷயம். காங்கிரசுக்கு தொண்டர்கள் இல்லை, பூத்களில் நிர்வாகிகள் இல்லை என பேசிய திமுக நிர்வாகியை கடுமையாக எதிர்க்கிறோம்'' என்றார்.