நிதிஷ்குமார் கட்சியின் முக்கிய தலைவர் தேஜஸ்வி கட்சியில் இணைகிறார்: பிஹாரில் பரபரப்பு

நிதிஷ்குமார் கட்சியின் முக்கிய தலைவர் தேஜஸ்வி கட்சியில் இணைகிறார்: பிஹாரில் பரபரப்பு

பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி சந்தோஷ் குஷ்வாஹா, எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் இணையவுள்ளார். இதன் காரணமாக ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பிஹாரின் பூர்னியா தொகுதியில் இரண்டு முறை எம்.பி.யாக இருந்த சந்தோஷ் குஷ்வாஹா ஆர்ஜேடி கட்சியில் இணையவுள்ளார். அவருடன் தற்போதைய பங்கா தொகுதி ஜேடியு எம்.பி கிரிதாரி யாதவின் மகன் சாணக்ய பிரகாஷ் ரஞ்சன் மற்றும் முன்னாள் ஜஹானாபாத் தொகுதி எம்.பி ஜெகதீஷ் சர்மாவின் மகனும், முன்னாள் எம்எல்ஏவான ராகுல் சர்மா ஆகியோரும் ஆர்ஜேடியில் இணைய உள்ளனர்.

இவர்கள் அனைவரும் இன்று நடைபெறும் விழாவில் ஆர்ஜேடி கட்சியில் இணையவுள்ளனர். ஆர்ஜேடி கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் அவர்கள் கட்சியில் இணைகிறார்கள். பூர்னியா பிராந்தியத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய முகமாக உள்ள சந்தோஷ் குஷ்வாஹா, ஆர்ஜேடி கட்சியில் இணைவதால் அக்கட்சியின் பலம் உயரும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிஹார் முழுவதும் முக்கிய தொகுதிகளில் அனுபவம் வாய்ந்த தலைவர்களையும், பிராந்திய பகுதிகளில் செல்வாக்கு மிக்கவர்களையும் கட்சியில் சேர்க்க ஆர்ஜேடி தீவிரம் காட்டி வருகிறது.

243 உறுப்பினர்களைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கான தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நவம்பர் 14-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.