பாகுபலி லிங்கத்துக்கு டஃப் கொடுக்கும் சகஸ்ரலிங்கம்! காடு, மலை கடந்து பீகார் செல்கிறது!
பீகார் மாநிலத்தில் உள்ள வீராட் ராமாயண் கோயிலின் பிரதிஷ்டை விழாவுக்காக மாமல்லபுரம் சிற்பக் கலைஞரான சி.லோகநாதன் ஸ்தபதி உலகிலேயே மிக பெரிய சகஸ்ரலிங்கத்தை செதுக்கியுள்ளார்.
மாமல்லபுரம் பகுதியை சேர்ந்தவர் சி.லோகநாதன் ஸ்தபதி (65). இவர் மாமல்லபுரம் அரசினர் சிற்பக் கலைக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். கடந்த 45 ஆண்டுகளாக சிற்பியாக இருந்து வரும் இவர் பல்வேறு சிற்பங்களை செதுக்கி இருக்கிறார். அதில் அவரது திறமையை உலகறிய வைத்துள்ளது, பீகார் மாநில கோயிலுக்காக செதுக்கப்பட்ட 1008 லிங்கங்களுடன் 33 அடி உயர சகஸ்ரலிங்கம் சிற்பம்.
கடந்த 2022 ஆம் ஆண்டு பீகார் மாநிலம், பாட்னா நகருக்கு அருகில் உள்ள கிழக்கு சாம்பாரண் என்ற இடத்தில் உள்ள கோயிலின் பிரதிஷ்டைகாக 1008 லிங்கங்களுடன் கூடிய 33 அடி உயர சகஸ்ரலிங்கம் கருங்கல்லில் வடிவமைத்து தரும்படி சி.லோகநாதனுக்கு ஆர்டர் வந்துள்ளது.
இதற்காக திருநெல்வேலியில் உள்ள ஒரு கல் குவாரியில் இருந்து 350 டன் எடை கொண்ட கருங்கல் வாங்கப்பட்டு, 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சகஸ்ரலிங்கம் வடிவமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக லோகநாதன் தலைமையில் 30 சிற்பிகள் இந்த சிற்பத்தை செதுக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது 100 சதவித பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று இந்த பிரம்மாண்ட சகஸ்ரலிங்கத்திற்கு முறையாக வாஸ்து பூஜைகள் செய்யப்பட்டன.
அதன்படி ஒரு மாத பயணத்திற்கு பின் டிசம்பர் மாத இறுதியில் பீகார் சென்றடைய உள்ளது. பின்னர் ஜனவரியில் சகஸ்ரலிங்கம் அங்கு நிலை நிறுத்தப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டு 3 அடுக்குகளை கொண்ட வீராட் ராமாயண் கோயில் கட்டப்பட உள்ளது. பல மாநிலங்கள் வழியாக பயணம் செய்யும் இந்த சகஸ்ரலிங்கத்தை வழி நெடுகிலும் பக்தர்கள் ஆங்காங்கே வழிபாடு செய்ய உள்ளனர்.
33 அடி உயரத்தில் அழகுற காட்சி அளிக்கும் சகஸ்ரலிங்கத்தின் மேல்புறத்தில் 72 லிங்கங்கள் வீதம், 14 அடுக்குகளில் 1008 சிறிய லிங்கங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.