சென்னையில் பிரதமர் பங்கேற்றும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு: நயினார் நாகேந்திரன்
வரும் 23ஆம் தேதி சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் கூறியதாவது, "பிரதமர் மோடி வரும் 23ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதில் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அன்று எந்தெந்த கட்சி பாஜக கூட்டணியில் இடம்பெறும் என்பது அனைவருக்கும் முழுமையாக தெரியவரும்" என்றார்.
ஜனநாயகன் படம் தொடர்பான ராகுல் காந்தி கருத்துக்கு பதிலளித்த அவர், "சென்சார் போர்ட் தனி அமைப்பு, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்டவை தனி அமைப்பு. இந்த அமைப்புகளுக்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது கூட தெரியாமல் ராகுல் காந்தி பேசுவது வருத்தமாக உள்ளது. கரூரில் நடந்த சம்பவம் யாரால் நடந்தது. 41 பேர் இறந்து போனதற்கு யார் காரணம்? நாங்களா பொதுக்கூட்டம் போட்டோம். இந்த விவகாரத்தில் சிபிஐக்கும், எங்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது.
கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை போடப்பட்டு உள்ளது. இதற்காக ஒரு சார்பை குறை சொல்வது சரியாக இருக்காது. ஜனநாயகன் படம் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதை அரசியல் ஆக்குவது சரியானதாக இருக்காது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் ராகுல் காந்தி தனியாக நின்றால் வெற்றி பெற்று விடுவாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.