திருவல்லிக்கேணி அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் லஞ்சம் பெற்ற 9 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம்
திருவல்லிக்கேணி அரசு தாய்சேய் நல மருத்துவமனையில் நோயாளிகளிடம் லஞ்சம் பெற்ற 9 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கமும், 4 மருத்துவ பணியாளர்கள் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் 2 பேட்டரி வாகனங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் ரூ.74.28 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தற்போது பார்வை இழப்பு தடுப்பு 0.33 சதவீதமாக இருக்கிறது. தமிழகத்தில் 95 அரசு கண் மருத்துவமனைகளும், 38 அரசு காணொலி கண் மருத்துவமனைகளும், 13 அரசு நடமாடும் கண் பரிசோதனை பிரிவுகளும் இயங்கி வருகின்றன.
இந்த ஆண்டு 60 லட்சம் செலவில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு புதிய நடமாடும் கண் பரிசோதனை பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன. கிண்டி, கூடலூர், வாலாஜா, மேலப்பாளையம் போன்ற மருத்துவமனைகளில் கண் சிறப்பு அறுவை அரங்கத்துடன் கண் பிரிவு அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை 12,167 கண்புரை பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு, 1,82,423 பயனாளிகளுக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சைகள் அரசு மற்றும் தனியார் தொண்டு மருத்துவமனைகளில் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இதற்காக சுமார் ரூ.30 கோடி உதவி தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தற்போது வரை 5,946 கண்கள் தானமாக பெறப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே அதிக கண் தானம் பெறப்பட்டது தமிழகத்தில்தான். மேலும், இந்த ஆண்டு இதுவரை 27,90,093 பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனைகள் செய்யப்பட்டு, 2,00,214 கண் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மீதமுள்ள குழந்தைகளுக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 3 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கண் கண்ணாடிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவல்லிக்கேணி அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் லஞ்சம் வாங்கிய 9 ஒப்பந்த பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 4 மருத்துவ பணியாளர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 4 செவிலியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.