விலையில்லா மடிக்கணினி திட்டம்: கொள்முதல் செய்ய 3 நிறுவனங்கள் தேர்வு!

விலையில்லா மடிக்கணினி திட்டம்: கொள்முதல் செய்ய 3 நிறுவனங்கள் தேர்வு!

தமிழ்நாடு அரசு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கு மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, 2011ஆம் ஆண்டு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு வரை மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.

இதற்கிடையே கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளாகப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. கரோனா தொற்று குறைந்த பின்னர், திமுக ஆட்சி அமைந்தவுடன் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் எனவும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 2025-2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில், கல்லூரி மாணவர்கள் 20 லட்சம் பேருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், வேளாண்மை, மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்குவதற்கு, தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் சர்வதேச டெண்டரை கோரியது.

மடிக்கணினிகளை வழங்கும் நிறுவனம், ஒரு வருட உத்தரவாதம் மற்றும் குறைந்தபட்சம் மூன்று வருட சேவையை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும், இன்டெல் நிறுவனத்தின் i3 ஜெனரேஷனின் 1210U, 1215U, 1220P ஆகிய புராசஸர்களும், ஏஎம்டி (AMD) நிறுவனத்தின் R3 7320U, R3 7330U, R3 7335U ஆகிய புராசஸர்கள் அல்லது இவற்றிற்கு இணையான திறன் கொண்ட புராசஸர்களுடன் மடிக்கணினி இருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.

மேற்குறிப்பிட்ட விதிமுறைகளின்படி, குறைந்த விலையில் ஒப்பந்தப்புள்ளி கோரும் நிறுவனங்களுக்கு மடிக்கணினி விநியோக அனுமதி வழங்கப்படும் எனவும் எல்காட் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் விலையில்லா மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது, Acer, Dell, HP நிறுவனங்கள் பங்கேற்று ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பித்தன. இந்நிலையில், Acer, Dell, hp ஆகிய நிறுவனங்கள் குறைந்த விலையில் ஒப்பந்தம் கோரியதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க Acer, Dell, HP ஆகிய மூன்று நிறுவனங்களும், நிதி தகுதி பெற்ற L1 நிறுவனங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்நிறுவனங்கள் அடுத்தடுத்த செயல்முறைக்கு அனுப்பப்படுவதாக எல்காட் நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு ஒரு மடிக்கணினியை 21,650 ரூபாய்க்கு கொள்முதல் செய்யும் நிலையில், மார்ச் மாத இறுதிக்குள் மடிக்கணினி விநியோகம் செய்யும் பணியை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மடிக்கணினிகளை மாணவர்களுக்கு விநியோகம் செய்வது மற்றும் அந்த திட்டத்தை தொடங்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள அடுத்த வாரம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான குழு கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.