அன்புமணியை உடனடியாக கைது செய்ய வேண்டும்: அருள் எம்எல்ஏ

அன்புமணியை உடனடியாக கைது செய்ய வேண்டும்: அருள் எம்எல்ஏ

அன்புமணிக்கு தன்னை கொல்ல வேண்டும் என்ற விருப்பம் உள்ளதாக சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.

சேலம் வாழப்பாடியில் பாமக எம்எல்ஏ அருள் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பிறகு தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசை, சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து தைலாபுரம் இல்லம் முன்பு செய்தியாளர்களை சந்தித்த பேசிய அவர், "சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு வந்த போது என்னுடைய கார் மீது கற்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல். அன்புமணி ராமதாஸ் ஏவி விட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அன்புமணியின் தூண்டுதல் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதால், முதல் குற்றாவாளியாக அவரது பெயரை சேர்த்து போலீசார் அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும். அதே போன்று முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ளதால் அவர்கள் அனைவரையும் போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும். அன்புமணிக்கு என்னை கொல்ல வேண்டும் என்பது விருப்பம். அதற்காக இப்படிப்பட்ட வேலைகளை மறைமுகமாக இருந்து செய்து வருகிறார்.

போலீசார் இந்த விவகாரத்தில் தீவிரம் காட்ட வேண்டும் என வலியுறுத்திக் கொள்கிறேன். அதே போல் தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஒரு வழக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது. அதை ஏற்க முடியாது. கொலை முயற்சி செய்ய வந்தவர்களை எளிதாக விட்டு விட முடியாது. அன்புமணி குறித்த எல்லா தகவல்களையும் விரைவில் தெரிவிப்பேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "சேலத்தில் டெக்ஸ்டைல் பார்க் கொண்டு வர இடம் ஒதுக்கி விட்டு, இப்போது கலரிங் பார்க் என பெயர் வைக்கிறார்கள். இதனை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இதை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்தவுள்ளோம்" என்றார்.

பாட்டாளி மக்கள் கட்சியில் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள், அந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளர்கள் என இரு பிரிவுகளாக செயல்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, ராமதாஸ் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி அன்புமணி உத்தரவிட்டு வருகிறார். பாமக சார்பாக எம்எல்ஏவாக இருந்து வந்த அருளை, கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கி அன்புமணி உத்தரவிட்டார்.

தன்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என எம்எல்ஏ அருள் தெரிவித்திருந்த நிலையில், கடந்த வாரம் அவர் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.