பொதுவாழ்வு என்றால் என்னவென்று விஜய்க்கு தெரியாது: வைகோ

பொதுவாழ்வு என்றால் என்னவென்று விஜய்க்கு தெரியாது: வைகோ

மதிமுகவின் நிர்வாக குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பின்னர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன. இதனால் மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர். கோயம்புத்தூரில் போதைப் பழக்கத்தால் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். எனவே போதையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும், நடை பயணத்தையும் மேற்கொண்டுள்ளேன். எனது சொந்த ஊரில் போராட்டம் மற்றும் நீதிமன்றத்திற்கு சென்று டாஸ்மாக் கடையை மூடியுள்ளேன்.

மீண்டும் நடைபயணம்

ஆனால் தற்பொழுது பள்ளி, கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் எளிதாக கிடைக்கின்றன. காவல்துறை அதனை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் மது போதையின் பிடியில் சிக்கி எண்ணற்ற குடும்பங்கள் சீரழிந்து கொண்டு இருக்கிறது. போதைப் பொருட்கள் விற்கும் கடைகளை காவல் துறையினர் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கின்றனர்.

ஆனால், இதுவரை யாரையும் சிறையில் அடைக்கவில்லை. அரசின் கண்களில் மண்ணை தூவி விட்டு போதை பொருட்களை விற்பனை செய்கிறார்கள். 'சமத்துவ நடைபயணம்' என்கிற பெயரில், ஜனவரி 2 ஆம் தேதி திருச்சியிலும், ஜனவரி 12 ஆம் தேதி மதுரையிலும் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறேன். திமுக அரசு மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை.'' என்றார்.

'விஜய் முயற்சி வெற்றி பெறாது'

விஜய் குறித்து பேசிய வைகோ, '' கடற்கரை மணலில் கோட்டை கட்டிக்கொண்டு விஜய் பேசுகிறார். பொறுப்புணர்வு, குற்ற உணர்ச்சி இல்லாமல், மருத்துவ வசதி எதுவும் செய்யாமல், தனக்கு ஒரு கூட்டம் வருகிறது என்று காட்டுவதற்காக, ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு ஒரு பேருந்தை வைத்துக் கொண்டு, அதன் மீது ஏறி சினிமா வசனங்களை பேசிக்கொண்டு இருக்கிறார். பொதுவாழ்வு என்றால் என்னவென்று விஜய்க்கு தெரியாது. அவர் முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது. திமுகவை நாங்கள் ஏன் விமர்சனம் செய்வதில்லை என்றால், கூட்டணியில் இருந்து கொண்டே கூட்டணி கட்சி பற்றி விமர்சனம் செய்வது தர்மம் கிடையாது.'' என்றார்.

'வாழ்க வசவாளர்கள்'

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் தாமதம் செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு மாறானது என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, '' தமிழ்நாட்டுக்கு பச்சை துரோகம் செய்யும் ஒரு மனிதர் ஆளுநர் மாளிகையில் அமர்ந்து கொண்டு பாஜகவுக்கு எடுபிடியாக செயல்படுகிறார்.

வாக்குரிமையில் தலையிட்டு லட்சக்கணக்கானவர்களை வாக்காளர்களாக இல்லாமல் செய்ய முயற்சிக்கின்றனர். எமர்ஜென்சி காலத்தில் கூட இது போன்ற நெருக்கடி ஏற்படவில்லை. மதிமுக சார்பில் ''SIR''க்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்ற வைகோவிடம், வரும் 20ம் தேதி புதிய கட்சி மற்றும் கொடியை அறிமுகப்படுத்தும் மல்லை சத்யா குறித்த கேள்விக்கு, i don't care அதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை, விலகி சென்றவர்கள் நன்றாக இருக்கட்டும், வாழ்க வசவாளர்கள்'' என தெரிவித்தார்.