சர்ச்சைக்குரிய பதிவு விவகாரம்... ஆதவ் அர்ஜூனா வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்குப் பின் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதால் போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய ஆதவ் அர்ஜூனா மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற்ற தவெக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் போலி விடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் தவறான கருத்துகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் தவெக தோ்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, எக்ஸ் தளத்தில், அரசின் அடுக்குமுறைக்கு எதிராக இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளைப் போல Gen Z புரட்சி ஏற்படும் என தமிழக அரசை எச்சரிக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டார். இந்தப் பதிவை சிறிது நேரத்திலேயே ஆதவ் அர்ஜூனா நீக்கிவிட்டார்.
இந்த பதிவின் அடிப்படையில் ஆதவ் அர்ஜூனா மீது வன்முறையைத் தூண்டுவது, இரு பிரிவினரிடையே பகையை தூண்டுவது, இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவது, வதந்தியை பரப்புவது (BNS 192, 196(1)(b), 197(1)(d), 353(1)(b), 353(2) உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து தன் மீது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஆதவ் அர்ஜூனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், 34 நிமிடங்களில் சமூக வலைதள பதிவுகளை நீக்கி விட்ட நிலையில், அரசியல் உள் நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எக்ஸ் தளத்தில் தன்னுடைய பதிவு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் பதிவிடப்படவில்லை.
எனவே, காவல் துறை நடவடிக்கை எடுக்க தடைவிதிக்க வேண்டும். தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆதவ் அர்ஜூனா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், உடனடியாக பதிவு நீக்கப்பட்டது. சுமார் 18 மணி நேரத்திற்கு பின் காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தனது கருத்து என்பது அரசுக்கு எதிரானது மட்டுமே. எந்த சமுதாயத்தையோ அல்லது மதத்தையோ குறிப்பிடவில்லை. தனது கருத்தால் எந்த கலவரமும் ஏற்படவில்லை. அதனால், கலவரத்தை தூண்டியத்தாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
காவல்துறை தரப்பில், சிறிது நேரம் என்றாலும் சுமார் 1 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். அவரது கருத்து பலரை தூண்டும் வகையில் உள்ளது. காவல் துறை தன்னிச்சையாக வழக்கு பதிவு செய்ய அதிகாரம் உள்ளது. விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால் வழக்கை ரத்து செய்ய கூடாது என தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.