ஜி.கே.மணியின் பதவியை பறிக்க வேண்டும் - அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா!

ஜி.கே.மணியின் பதவியை பறிக்க வேண்டும் - அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா!

 பாமக சட்டமன்ற குழு தலைவராக உள்ள ஜி.கே.மணியை அந்த பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி, அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தின் முன்பு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர், சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று (அக்.13) தொடங்கியது. இன்று தொடங்கி உள்ள இக்கூட்டத்தொடர் வரும் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது. இதில், கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனிடையே, இன்று கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பாமக சட்டமன்ற குழு தலைவராக உள்ள ஜி.கே.மணியை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி, அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் வெங்கடேஸ்வரன், சிவகுமார், சதாசிவம் ஆகியோர் சட்டப்பேரவை வளாகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு பிறகு, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "பாமக தலைவர் அன்புமணியின் கடிதம் 2 மாதங்களுக்கு முன்பாகவே சபாநாயகரிடம் கொடுக்கப்பட்டது. இதில், பாமக சட்டமன்ற குழு தலைவராக தன்னையும், கொறடாவாக மயிலம் எம்எல்ஏ சிவகுமாரையும், துணை கொறடாவாக மேட்டூர் எம்எல்ஏ சதாசிவத்தையும் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து பரிசீலனை செய்கிறோம் என்று தெரிவித்தனர்.

ஆனால், இன்று காலை சபாநாயகரிடம் கேட்டோம். அவர் முறையான நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. எனவே, சபாநாயகர் அப்பாவு ஜனநாயக முறைப்படி செயல்பட்டு, அன்புமணி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

 தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து பாமக சட்டமன்ற உறுப்பினரும், ராமதாஸ் ஆதரவாளருமான ஜி.கே.மணி, "பாமக சார்பில், சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு பிரிவாக செயல்படுவது வருத்தமளிக்கிறது. பாமகவை உருவாக்கிய ராமதாஸ் எந்த பதவிக்கும் போகாத ஒரு தலைவர். 45 ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்த பாமகவிற்கு இது மிகப்பெரிய சோதனை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. பாமகவில் ஐந்து எம்.எல்.ஏக்களை நியமித்தவர் ராமதாஸ். அவருக்கே முழு அதிகாரம் உள்ளது. அவரது வழியில் நாங்கள் தற்போது பயணிக்கிறோம். கட்சிக்குள்ளே போராடுவது துரதிஷ்டவசமானது” என்று அவர் தெரிவித்தார்.