தேர்தலுக்காகவே புதிய அறிவிப்புக்கள்; தமிழக அரசு மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
தேர்தலை மனதில் வைத்தே பல்வேறு அறிவிப்புக்களை தமிழக அரசு வெளியிட்டு வருவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாய ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
அப்போது வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ''பாஜக விவசாய அணி சார்பில் மாநில அளவிலான விவசாயிகள் மாநாடு, கண்காட்சி, கருத்தரங்கம் இன்று தொடங்கியுள்ளது. இந்த மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் உட்பட முக்கிய மாநில தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
சமீபத்தில் இயற்கை விவசாய நிகழ்ச்சிக்கு மோடி வந்தார். மேலும், விவசாய தொழிலை பிரபலப்படுத்த மத்திய அமைச்சர் வருகிறார். மஞ்சள் விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளை சந்தித்துப் பேசுவது போன்ற நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். விவசாயிகளுடன் பேசி விவசாயிகள் கோரிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே மனு அளிக்கப்பட்டு உள்ளது. அதற்கான தீர்வை நாளை மத்திய வேளாண்மை அமைச்சர் அளிப்பார்" என்றார்.
ஓய்வூதியம் தொடர்பாக பேசிய அவர், "திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னது என்ன? இப்போது அறிவித்துள்ளது என்ன? தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதியம் திட்டம் அறிவித்து விட்டு இப்போது புதிய ஓய்வூதியத் திட்டம் அறிவித்து இருக்கிறார். போராட்டம் காரணமாக ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்று அறிவித்து இருக்கிறார்.
ஏற்கனவே கடன் சுமை அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு. தேர்தலுக்காக அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். தமிழகத்தில் விவசாயிகள், அரசு ஊழியர்கள் போராட்டம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மூடி மறைக்க திமுக அரசு முயற்சி எடுத்து வருகிறது.
விவசாயிகள் கோரிக்கைகளில் எந்த கோரிக்கை சாத்தியமோ அதை மத்திய அரசு நிறைவேற்றும். உற்பத்தி செலவு, தொழில் துறை மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. எந்த நேரத்தில் விவசாயிகளுக்கு செய்ய வேண்டுமோ? அதை மத்திய அரசு நிச்சயமாக செய்யும்.
பொங்கல் பரிசு தொடர்பாக பேசிய அவர், "பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனால், பொங்கல் பரிசு பொருட்கள் தரமானதாக இல்லை. பொங்கல் பரிசுப் பொருட்கள் வாங்குவதில் ஊழல் இருக்கிறது. இதனால் இந்த முறையாவது பொங்கல் பரிசுப் பொருட்கள் ஊழல் இல்லாமல் தரமானதாக வாங்க வேண்டும்.
இன்று தமிழகத்தில் சிறுவர்கள் கூட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருகிறார்கள். தமிழகத்தில் 'அப்பா' என்று சொன்ன முதல்வர் போதைப் பொருட்கள் கட்டுப்பாடு விவகாரத்தில் மத்திய அரசை கைக்காட்டி செல்கிறார்.
நாமக்கல்லில் விவசாயிகள் பெயரில் போலியாக பணம் வழங்கப்பட்டது. மாநில அரசு தான் உண்மையான விவசாயிகளை அடையாளம் காட்டி மத்திய அரசுக்கு பட்டியல் கொடுக்க வேண்டும். மாநில அரசு கொடுக்கும் பட்டியலுக்கு ஏற்ப மத்திய அரசு விவசாயிகளுக்கு பணம் வழங்கும்" என்றார்.
அமைச்சர் சேகர்பாபு தொடர்பாக பேசிய அவர், "இந்து அறநிலையத்துறையின் அமைச்சர் சேகர்பாபு தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். முதல்வர், துணை முதல்வர் உட்பட அமைச்சர்கள் அனைவரும் இந்துக்களை இழிவாக பேசி சிறுபான்மை ஓட்டுகளை பெறுவதையே நோக்கமாக இருக்கிறார்கள்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தான் வருவார் என்றும், தவெக விஜய்க்கு இரண்டாம் இடம் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பு வெளியாகி இருப்பதாகவும் கூறுகிறீர்கள். கருத்துக்கணிப்பு யார் வெளியிட்டார்கள்? தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. இன்னும் தேர்தலுக்கு காலம் இருக்கிறது.
கருத்துக்கணிப்பை விட மக்கள் கணிப்பு முக்கியமானது. மக்கள் கணிப்பு எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் இருக்கப் போகிறது. அதில் எந்தவித மாற்றமும் இல்லை'' என்றார்.
மேலும் பேசிய அவர், திருச்சியில் நாளை நடைபெறும் பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமித்ஷா கலந்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.