10-வது முறையாக முதல்வராக பதவியேற்கும் நிதிஷ் குமார்! யார் யாருக்கு அமைச்சரவை பதவி? சூடுபிடித்த பேச்சுவார்த்தை
பீகார் முதலமைச்சராக 10-வது முறையாக வரும் வரும் 20 ஆம் தேதி நிதிஷ் குமார் பதவியேற்கிறார்.
243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப் பேரவைக்கு இரண்டு கட்டங்களாக கடந்த நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மெகா கூட்டணியிலும் போட்டியிட்டன. இந்நிலையில் ஜேடியு, பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளை கைப்பற்றியது.
ஆர்ஜேடி, காங்கிரஸ் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் மூலம் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் வரும் நவம்பர் 20 ஆம் தேதி ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். முதலமைச்சர் பதவியேற்பு விழா பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இவ்விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், என்டிஏ கூட்டணியை சேர்ந்த முதலமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர்.
கடந்த 2005 ஆம் ஆண்டு, முதன்முறையாக முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ்குமார், கடந்த 20 வருடங்களில் 10 முறை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். பாட்னா மாவட்ட நிர்வாகம், கங்கை நதிக்கு அருகில் உள்ள 62 ஏக்கர் நிலம் பதவியேற்பு விழாவிற்காக தயார் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து பாட்னா மாவட்ட ஆட்சியர், காந்தி மைதானம் முதலமைச்சர் பதவியேற்பு விழாவை முன்னிட்டு இன்று (நவ.17) முதல் நவம்பர் 20 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் மூடப்படுகிறது. அப்போது பொதுமக்களுக்கு அனுமதியில்லை” என்றார்.
இதனிடையே பீகாரில் புதிதாக அமையவுள்ள நிதிஷ்குமாரின் தலைமையிலான அமைச்சரவை குறித்து பாஜக, ஐக்கிய ஜனதா தளம், ஹிந்துஸ்தானி ஆவாமி மோர்சா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
நடந்து முடிந்த தேர்தலில் பாஜக அதிகபட்சமாக 89 தொகுதிகளை வென்றுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளும், சிராக் பாஸ்வான் எல்ஜேபி 19, மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மஞ்சியின் கட்சி HAM 5, ராஜ்யசபா எம்பி உபேந்திரா குஷ்வாஹாவின் கட்சி RLM 4 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன. புதிய அரசு அமைப்பது குறித்து 5 கூட்டணி கட்சித் தலைவர்கள் நிதிஷ்குமாரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.
மேலும் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரேம் ரஞ்சன் படேல் நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசுகையில், மக்களின் ஆணைக்கேற்ப அமைச்சரவை அமைப்பது முதலமைச்சரின் தனி உரிமை. பாஜகவை பொறுத்த வரை, அமைச்சர் பதவிக்கான தலைவர்களை குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்” என கூறினார்.