பெண்களே உஷார்! வீட்டை சுத்தம் செய்ய பயன்படும் கிளீனர்களால் புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு! எச்சரிக்கும் ஆய்வு
வீட்டை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பது ஆரோக்கியத்திற்கு முக்கியம் என்று நாம் நம்புகிறோம். இருக்கும் இடம் சுத்தமாக இல்லை என்றால் பலருக்கும் உலகமே இருண்ட மாதிரி இருக்கும். ஆனால், சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள் நுரையீரல் பாதிப்பு மற்றும் புற்றுநோய் என மிக பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
இது தொடர்பான ஆய்வுகள், குறிப்பாகப் பெண்கள் மத்தியில், சுத்தம் செய்யும் பழக்கத்தினால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு, தினமும் ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பதற்கு சமமானதாக இருக்கலாம் என்று எச்சரிக்கிறது.
சுத்தம் செய்யும் பொருட்களால் நுரையீரலுக்கு ஏற்படும் பாதிப்பு! நார்வேயில் உள்ள பெர்கன் பல்கலைக்கழக (University of Bergen) ஆராய்ச்சியாளர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 6,000க்கும் மேற்பட்டவர்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் மூலம், துப்புரவுப் பொருட்களை தவறாமல் பயன்படுத்துவது, குறிப்பாக ஸ்ப்ரே வடிவில் உள்ள கிளீனர்கள், காலப்போக்கில் நுரையீரலின் செயல்பாட்டை (Lung Function) வெகுவாக குறைக்கிறது என்று தெரியவந்துள்ளது.
சிகரெட்டுக்கு இணையான பாதிப்பு: வாரத்திற்கு ஒரு முறையாவது வீடு அல்லது அவர்கள் இருக்கும் இடத்தை சுத்தம் செய்யும் பெண்களின் நுரையீரல் செயல்பாடு, 20 வருடங்களாக தினமும் 20 சிகரெட்டுகள் பிடிக்கும் நபர்களுக்கு சமமான அளவில் குறைந்திருந்தது. தொழில்முறை துப்புரவுத் தொழிலாளர்கள் (Professional Cleaners) மத்தியில் இதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருந்தது.
புற்றுநோய் எச்சரிக்கை: வீட்டை சுத்தம் செய்ய பயன்படும் க்ளீனர்கள், பாத்திரம் கழுவும் சோப்புகள், டிடர்ஜெண்ட் போன்றவையில் உள்ள ரசாயனம் மனித ஹார்மோன்கள் மற்றும் அவை ஒழுங்குபடுத்தும் இனப்பெருக்கம் மற்றும் பிற உயிரியல் செயல்முறைகளில் தலையிடுகின்றன.
'சுத்தம் என்பது ஆரோக்கியமானது என்று அர்த்தமல்ல' என உணர்ந்ததாக, புற்றுநோயில் இருந்து மீண்ட மிஷேல் படிதார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொதுவான சுத்தப்படுத்திகள், ஒவ்வொரு முறை சில நச்சுக்களை வெளியிடுகின்றன.
இந்த இரசாயனங்கள் ஹார்மோன்களை சீர்குலைத்து, வீக்கத்தை அதிகரித்து, நமது ஒட்டுமொத்த நச்சு சுமையை அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், சில பொருட்களை வாழ்நாளில் பயன்படுத்த கூடாது எனக்கூறி பட்டியலிட்டுள்ளார்.
ஏன் பெண்களுக்கு அதிக பாதிப்பு? இந்த ஆய்வில், ஆண்களுக்கு நுரையீரல் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்படவில்லை. இதற்கு முக்கியக் காரணம், ஆய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில் துப்புரவு வேலைகளில் ஆண்களின் பங்கேற்பு குறைவாக இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பொதுவாக, வீட்டிலும் வேலை பார்க்கும் இடங்களிலும் சுத்தம் செய்யும் பணியில் பெண்கள் அதிகமாக ஈடுபடுவதால், அவர்களுக்கு அதிக பாதிப்பு இருப்பதாக தெரிகிறது.
பாதிப்பிற்கு காரணம் என்ன? துப்புரவுப் பொருட்களில் உள்ள ரசாயனங்கள் தான் நுரையீரல் பாதிப்பிற்கு காரணமாகும். பிளீச் மற்றும் அம்மோனியா போன்ற கடுமையான ரசாயனங்கள், சுவாசப்பாதையில் எரிச்சலையும், வீக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
ஸ்ப்ரே கிளீனர்கள்: ஸ்ப்ரே கிளீனர்களில் இருந்து வரும் சிறிய துகள்கள் காற்றில் அதிக நேரம் தங்கி, நுரையீரலின் ஆழமான பகுதிகளுக்குச் சென்று நிரந்தர சேதத்தை ஏற்படுத்துகின்றன. இது நாள்பட்ட அடைப்புள்ள நுரையீரல் நோய் (Chronic Obstructive Pulmonary Disease) போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
சுத்தம் செய்யாமல் இருப்பது தான் தீர்வா?
இதற்காக வீட்டை சுத்தம் செய்யாமல் இருக்கவா என பலருக்கும் தோன்றும். ஆனால் நுரையீரல் பாதிப்பு மற்றும் புற்றுநோயின் அபாயத்தை குறைக்க சில வழிமுறைகள் உள்ளன.
- இயற்கை மாற்றுகளைப் பயன்படுத்தலாம்: கடுமையான ரசாயனங்களுக்குப் பதிலாக, சோப்பு, தண்ணீர், வினிகர் அல்லது பேக்கிங் சோடா போன்ற இயற்கை மாற்றுகளைப் பயன்படுத்துங்கள்.
- ஸ்ப்ரேக்களைத் தவிருங்கள்: ஸ்ப்ரே கிளீனர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, அவற்றிற்குப் பதிலாக மைக்ரோஃபைபர் துணிகளைப் பயன்படுத்தலாம்.
- நல்ல காற்றோட்டம்: சுத்தம் செய்யும் போது ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறந்து வைத்து, நல்ல காற்றோட்டத்தை (Ventilation) உறுதி செய்யுங்கள்.
- ரசாயனங்களைக் கலக்க வேண்டாம்: பிளீச் மற்றும் அம்மோனியா கொண்ட கிளீனர்களை ஒருபோதும் கலக்காதீர்கள், ஏனெனில் இவை ஆபத்தான நச்சு வாயுக்களை (Toxic Fumes) உருவாக்கும்.
நம்முடைய அன்றாட சுத்தம் செய்யும் பழக்கவழக்கங்களில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம், நம் நுரையீரலைப் பாதுகாத்து, நீண்ட கால ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.