தந்தையின் இறுதி சடங்குக்கு பணம் இல்லாமல் தவித்த குழந்தைகள்! உடனடியாக உதவிய தமிழக முதல்வர்

தந்தையின் இறுதி சடங்குக்கு பணம் இல்லாமல் தவித்த குழந்தைகள்! உடனடியாக உதவிய தமிழக முதல்வர்

விழுப்புரம்: சங்கராபுரம் அருகே தந்தையின் இறுதி சடங்கு செலவுக்கு பணம் இல்லாமல் அவரது குழந்தைகள் பரிதவித்த செய்தியை அறிந்த தமிழக முதல்வர் தொலைபேசி மூலமாக பேசி அவர்களுக்கு உரிய உதவிகள் வழங்கினார்.

சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (46). தொழிலாளியான இவருக்கு வசந்தா (40) என்ற மனைவி இருந்தார். இவர் 7 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். மேலும், கமலக்கண்ணனுக்கு லாவண்யா (24), ரீனா (21), ரிஷிகா(17) ஆகிய 3 மகள்களும், அபினேஷ் (13) என்ற மகனும் உள்ளனர். இவர்களை தினசரி கூலி வேலை செய்து கல்லூரியில் படிக்க வைத்து வந்தார்.

இந்நிலையில் கமலக்கண்ணனுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு சிறுநீரகம் செயலிழந்து விட்டதாக கண்டறிந்து தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் வருமானம் இல்லாததால் குடும்பம் மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டது.

பொறியியல் படித்து வந்த அவரது மூத்த மகள் லாவண்யா கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் தனது படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார். அதேபோல் 8-ம் வகுப்பு படித்து வந்த ரீனா. 10-ம் வகுப்பு படித்து வந்த ரிஷிகா ஆகியோரும் தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தினர். தற்போது அபினேஷ் மட்டும் பூட்டை அரசு உதவிபெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த கமலகண்ணண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் அடக்கம் செய்வதற்காக சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இந்த தகவல் அறிந்து உறவினர்கள், கிராம மக்கள் கமலக்கண்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தனர்.

ஆனால் தாய், தந்தையை இழந்த 4 குழந்தைகளும் தந்தையின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் பரிதவித்தனர். இதை அறிந்து அந்த குழந்தைகளின் மீது இரக்கம் காட்டிய கிராம மக்கள் கமலக்கண்ணனின் உடலை அடக்கம் செய்ய தாங்களாகவே முன் வந்தனர். பின்னர், அவர்கள் ஒன்று கூடி இறுதி சடங்கிற்காக வீடு வீடாக சென்று பணம் வசூலித்து கமலக்கண்ணனின் உடலை முன்னின்று அடக்கம் செய்தனர்.

இந்த நிலையில், இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து தமிழக முதல்வரின் நேர்முக உதவியாளர் மூலமாக முதல்வரின் கவனத்திற்கு சென்றது. இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைந்த கமலக்கண்ணனின் மூத்த மகள் லாவண்யாவுடன் தொலைபேசி மூலமாக பேசினார். தொடர்ந்து லாவண்யா தனக்கு அரசு வேலை வேண்டும் மற்றும் தன் சகோதரிகள் படிப்பிற்கு உதவ வேண்டும் மற்றும் வீடு இல்லாமல் இருக்கிறோம். அதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தார்.

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், ''மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக கூறி உள்ளேன். அவரிடம் இது தொடர்பாக கூறுங்கள். உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்'' என உறுதி அளித்தார்.