விஜயை சந்தித்தது உண்மைதான் : சொல்கிறார் பிரவீன் சக்ரவர்த்தி

விஜயை சந்தித்தது உண்மைதான் : சொல்கிறார் பிரவீன் சக்ரவர்த்தி

 ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்ரவர்த்தி விஜயை சந்தித்ததாக வெளியானது தகவல் உண்மைதான் என பிரவீன் கூறியுள்ளார். 

தமிழக அரசின் கடனை உத்திரபிரதேசத்துடன் அவர் ஒப்பிட்டு பேசியது , திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் தான், கோவை விமான நிலையத்தில் அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தை உத்தரபிரதேசம் உடன் ஒப்பிட்டு நிதிநிலை அறிக்கை குறித்து  செய்தியாளர்கள் கேட்டதற்கு,  அதில் சர்ச்சை ஒன்றும் இல்லை. உத்தரபிரதேசம் பற்றி ஒப்பிடவில்லை. தமிழகத்தின் கடன் சூழ்நிலை பற்றி, ரிசர்வ் வங்கி என்ன சொல்லி இருக்கிறது என்று அது பற்றி தான் எடுத்து சொன்னேன். கருத்துக்கணிப்பு அவ்வளவு தான். என்று கூறினார், 

விஜய் சந்திப்பு குறித்து அவர் கூறியதாவது ; தவெக தலைவர் விஜயை சந்தித்து பேசினேன்.  பிரவீன் சக்கரவர்த்திக்கு நிறைய அடையாளங்கள் இருக்கின்றன. தனிப்பட்ட முறையில் சந்தித்தேன். டில்லியில் இதே போல நிறைய பேரை சந்திக்கிறேன். தமிழகத்தில் தான் இப்படி கேட்கிறீர்கள். தமிழக வெற்றிக்கழகம் குறித்து பிரிடிக்சன் தேவையில்லை. விஜய் கூட்டத்திற்கு மக்கள் உற்சாகமாக வருகின்றனர். அது வெளிப்படையாக தெரிகிறது.

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு

அது ஓட்டாக மாறுமா? மாறாதா ? என்பது கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மக்கள் அவரை நடிகராக பார்க்க வரவில்லை ஒரு அரசியல்வாதியாக பார்க்க வருகின்றனர். அதனால் அந்த எண்ணம் தெரிகிறது. அவர் ஒரு சக்தியாக உருவாகிவிட்டார். தமிழகத்தில் மூன்றே கோரிக்கைகள் தான். அதிக சீட்டுகள், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு. இது காங்கிரஸ் தொண்டரின் கோரிக்கை.

காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக எதிர்காலத்திற்காக கோரிக்கை. இதில் எந்த பிரச்னையும் இல்லை. எதற்கு இந்த கோரிக்கை எழுகின்றது என்றால் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் பலவீனமாகவே போய்க்கொண்டு இருக்கிறது.தற்பொழுது பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்திற்காக இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சில எம்எல்ஏ, எம்பி ஆகியோருக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். ஊட்டி விடும் கையை யாராவது கிள்ளுவார்களா?  

இவ்வாறு பிரவீன் சக்கரவர்த்தி கூறினார்.