"அவன் கதவ தட்டல, இடிச்சி ஒடச்சிட்டு இருக்கான்" - சர்ஃப்ராஸை புகழ்ந்த அஸ்வின்
விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மும்பை வீரர் சர்ஃப்ராஸ் கானின் ஆட்டத்தை பாராட்டி முன்னாள் வீரர் அஸ்வின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற குரூப் சி அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை மற்றும் கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் மும்பை அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் கோவா அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
மேலும் இந்த போட்டியில் மும்பை அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்ததுடன், 75 பந்துகளில் 9 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள் என 157 ரன்களைக் குவித்த சர்ஃப்ராஸ் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த நிலையில் சர்ஃப்ராஸ் கானின் இந்த ஆட்டத்தை முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அஸ்வின் தனது எக்ஸ் பதிவில், சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட சர்ஃப்ராஸ் கான், தற்போது விஜய் ஹசாரே கோப்பை தொடரிலும் அதனை தொடர்கிறார். அதிலும் குறிப்பாக அவர் 49 பந்துகளில் 55 ரன்களை எடுத்ததிலிருந்து, தற்சமயம் 75 பந்துகளில் 157 ரன்களை விளாசியது வரையிலும் அவரது ஃபார்ம் அபாரமாக இருந்துள்ளது.
குறிப்பாக அவர் இந்த இன்னிங்ஸில் 14 சிக்ஸர்களை விளாசியுள்ளார். மேலும் அவர் மிடில் ஓவர்களில் தனது ஸ்வீப் மற்றும் ஸ்லாக் ஸ்வீப் ஷாட்கள் மூலம் சுழற்பந்து வீச்சைத் துவம்சம் செய்து வருவதை பார்க்க சிறப்பாகவுள்ளது. அதனால் அவர் வாய்ப்புக்காக 'கதவைத் தட்டவில்லை, அதை உடைத்துக்கொண்டு' வருகிறார்.
சிஎஸ்கே அணி, அவரது இந்த சிறப்பான ஆட்டத்தைப் பயன்படுத்தி, அவரை ஆடும் லெவனில் சேர்ப்பதைப் பற்றி நிச்சயமாகப் பரிசீலிக்க வேண்டும். இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு இது ஒரு இனிமையான தலைவலியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஐபிஎல் 2026-க்காகக் காத்திருக்க முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
அஸ்வின் கூறுவது போல் சர்ஃப்ராஸ் கான் தனது அபார ஆட்டத்தின் மூலம் தனக்கான வாய்ப்புகளை உருவாக்கி வருகிறார். அவர் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் விளையாடிய 7 போட்டிகளில் ஒரு சதம், 3 அரைசதங்களுடன் 329 ரன்களை எடுத்திருந்தார். அதிலும் குறிப்பாக அதில் 47 பந்துகளில் சதமும், 15 பந்துகளில் அரைசதத்தையும் விளாசி இருந்தார்.