ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை வெல்லுமா இந்தியா? நியூசிலாந்துடன் இன்று மோதல்

ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை வெல்லுமா இந்தியா? நியூசிலாந்துடன் இன்று மோதல்

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கௌகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவிலும் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.

இதனையடுத்து, இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று (ஜனவரி 25) கௌகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணி முதலிரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளதால், இதிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, முதலிரண்டு போட்டிகளிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பதிவு செய்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த போட்டியில் இஷான் கிஷன் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஃபார்முக்கு திரும்பியது இந்திய அணிக்கு பெரும் பலமாக மாறியுள்ளது.

இருப்பினும் சஞ்சு சாம்சன் உள்ளிட்ட மற்ற பேட்டர்கள் கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மறுபக்கம் பவுலிங்கைப் பொறுத்தவரையில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றினாலும், மற்ற பவுலர்கள் ரன்களை வாரி வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இருப்பினும் மற்ற வீரர்களான டேரில் மிட்செல், டெவான் கான்வே உள்ளிட்ட மற்ற வீரர்கள் போதிய ரன்களைச் சேர்க்க தவறி வருவது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பவுலிங்கில் சான்ட்னர், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், இஷ் சோதி உள்ளிட்டோர் இருப்பது எதிரணிக்கு சற்று சவாலை கொடுக்கலாம்.

நேருக்கு நேர்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 16 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதே சமயம் நியூசிலாந்து அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.

கௌகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 7 சர்வதேச டி20 போட்டி மட்டுமே நடைபெற்றுள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும், சேஸிங் செய்த அணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளனர். இதனால் இந்த போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம்.

நேரலை தகவல்கள்

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. அதே போல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் இந்த போட்டியை காண முடியும். போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் நிலையில், டாஸ் நிகழ்வு மாலை 6.30 மணிக்கு நடைபெறும்.

உத்தேச லெவன்

நியூசிலாந்து: டிம் செஃபெர்ட், டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), கைல் ஜேமிசன், மாட் ஹென்றி, இஷ் சோதி, ஜேக்கப் டஃபி

இந்தியா: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், ஹர்ஷித் ரானா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங்