டி20 உலகக் கோப்பை 2026: பாகிஸ்தான் அணி அறிவிப்பு; பாபர், ஷாஹீன் ரிட்டர்ன்
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 7ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சிகளில் இறங்கியுள்ளன. மேலும் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன.
அதன் ஒருபகுதியாக தற்சமயம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, 16 பேர் அடங்கிய இந்த அணியின் கேப்டனாக சல்மான் அலி ஆகா நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக சல்மான் ஆகா கேப்டனாக செயல்படவுள்ளார்.
அதேசமயம் அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் ஆசாம், ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் நசீம் ஷா உள்ளிட்டோருக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. முன்னதாக பாபர் ஆசாம் கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தான் டி20 அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வந்த நிலையில் தற்சமயம் அவருக்கு டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
இருப்பினும் கடந்த மூன்று டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய முகமது ரிஸ்வான், ஹாரிஸ் ராவுஃப் உள்ளிட்டோருக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. குறிப்பாக முகமது ரிஸ்வான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பாகிஸ்தான் டி20 அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
மறுபக்கம் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சாரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் ஹாரிஸ் ராவுஃப் தொடர்ச்சியாக பாகிஸ்தான் டி20 அணியில் இடம் பிடித்து வந்த நிலையில், தற்போது டி20 உலகக் கோப்பை போன்ற தொடரில் அவருக்கு அணியில் இடம் கிடைக்காதது ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இருப்பினும் தற்போது அறிவிக்கப்பட்டிற்கு பாகிஸ்தான் அணியில் சாஹிப்ஷாதா ஃபர்ஹான், உஸ்மான் தாரிக் மற்றும் முகமது நஃபி உள்ளிட்டோர் முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர். அவர்களுடன் ஷதாப் கான், நசீம் ஷா, ஃபகர் ஜமான் உள்ளிட்ட அனுபவ வீரர்களுக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது.
எதிர்வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி குரூப் ஏ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, நெதர்லாந்து, மற்றும் நமீபியா ஆகிய அணிகளுடன் சேர்ந்து இடம் பிடித்துள்ளது. இதில் பிப்ரவரி 7ஆம் தேதி தங்களுடைய முதல் லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 10ஆம் தேதி அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணி, பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறும் முக்கிய போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது. அதன் பின் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும் தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் நமீபியாவிற்கு எதிராக பாகிஸ்தான் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.