ரியல் மாட்ரிடிற்கு அதிர்ச்சி கொடுத்த லிவர்பூல்; புள்ளிப்பட்டியலில் பேயர்ன் முனிச் முதலிடம்!

ரியல் மாட்ரிடிற்கு அதிர்ச்சி கொடுத்த லிவர்பூல்; புள்ளிப்பட்டியலில் பேயர்ன் முனிச் முதலிடம்!

ரியல் மாட்ரிடிற்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது.

ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் சார்பில் நடத்தப்படும் புகழ்பெற்ற கால்பந்து தொடர்களில் ஒன்றான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் லிவர்பூல் எஃப்.சி. மற்றும் ரியல் மாட்ரிட் சி.எஃப். அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில், தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் அபாரமாக செயல்பட்டு எதிரணியின் கோலடிக்கும் முயற்சிகளைத் தடுத்தனர்.

ரியல் மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி

இதன் காரணமாக முதல் பாதி ஆட்டநேர முடிவில் எந்த அணியும் கோல்கள் ஏதும் அடிக்காமல் 0-0 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. அதன்பின் நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் அபரமாக செயல்பட்ட லிவர்பூல் அணிக்கு அலெக்ஸிஸ் மேக் அலிஸ்டர் ஆட்டத்தின் 61ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து அணியை முன்னிலைப் படுத்தினார். அதனைத்தொடர்ந்து ரியல் மாட்ரிட் அணியும் கோலை அடிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்த நிலையிலும், எதிரணியின் டிஃபென்ஸைத் தாண்டி அவர்களால் சோபிக்க முடியவில்லை.

தொடர் வெற்றியைக் குவிக்கும் பேயர்ன் முனிச்

இன்று நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் எஃப்சி பேயர்ன் முனிச் மற்றும் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் எஃப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்ட பேயர்ன் முனிச் அணிக்கு ஆட்டத்தின் நான்காவது நிமிடத்தில் லூயிஸ் தியாஸ் முதல் கோலைப் பதிவு செய்து அணியை முன்னிலைப் படுத்தினார். அதனைத்தொடர்ந்து ஆட்டத்தின் 32ஆவது நிமிடத்திலும் தியாஸ் கோலை அடிக்க, பேயர்ன் முனிச் அணி முதல் பாதியிலேயே வலுவான முன்னிலைப் பெற்றது.

அதேசமயம் மறுபக்கம் முதல் பாதி ஆட்டத்தின் இறுதிவரை போராடிய பி.எஸ்.ஜி அணியால் எதிரணியின் டிஃபென்ஸைத் தாண்டி ஒரு கோல் கூட பதிவு செய்ய முடியவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில்பேயர்ன் முனிச் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் பி.எஸ்.ஜி அணி கம்பேக் கொடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டது.

அதன் பயனாக ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில் ஜோவோ நெவ்ஸ் பி.எஸ்.ஜி அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார். ஆனால் அதன்பின் இரு அணி வீரர்களும் கோலடிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதன் காரணமாக ஆட்டநேர முடிவில் பேயர்ன் முனிச் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் பி.எஸ்.ஜி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், நடப்பு சாம்பியன்ஸ் லீக் தொடரில் தோல்வியையே தழுவாம் 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் தக்கவைத்துள்ளது.