சிட்னி டெஸ்ட்: ஹெட் அதிரடி தொடக்கம்- முன்னிலையை நோக்கி ஆஸ்திரேலியா
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களை எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜாக் கிரௌலி 16 ரன்களிலும், பென் டக்கெட் 27 ரன்களிலும், ஜேக்கப் பெத்தெல் 10 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன் பின் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது. இதில் ஹாரி ப்ரூக் 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 84 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட நிலையில், மறுபக்கம் ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 41-வது சதத்தைப் பதிவு செய்தார். பின்னர் இந்த போட்டியில் ஜோ ரூட் 160 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்
அடுத்து களமிறங்கிய வீரர்களில் ஜேமி ஸ்மித் 46 ரன்களையும், வில் ஜேக்ஸ் 27 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 384 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மைக்கேல் நேசர் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் ஜேக் வெதர்லேட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வெதர்லேட் 21 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பெவிலியன் திரும்பினார். அடுத்து ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் - மார்னஸ் லபுஷாக்னே இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரையும் படிபடியாக உயர்த்தினர்.
இதில் டிராவிஸ் ஹெட் 91 ரன்களுடனும், மைக்கேல் நேசர் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதனையடுத்து 218 ரன்கள் பின் தங்கிய நிலையில், ஆஸ்திரேலிய அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
பிளேயிங் லெவன்
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேக்கப் பெத்தெல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிரௌலி, பென் டக்கெட், வில் ஜாக்ஸ், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங்
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: டிராவிஸ் ஹெட், ஜேக் வெதர்லெட், மார்னஸ் லபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், பியூ வெப்ஸ்டர், மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், மைக்கேல் நேசர்.