தந்தை மாரடைப்பு காரணமாக ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைப்பு!

தந்தை மாரடைப்பு காரணமாக ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைப்பு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சால் ஆகியோரின் திருமணம், ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாகத் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனையும், துணைக்கேப்டனுமாக அறியப்படுபவர் ஸ்மிருதி மந்தனா. இவர் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு உறுதுணையாக இருந்தார். இத்தொடரில் அவர் விளையாடிய 9 போட்டிகளில் 54.25 என்ற சராசரியில் 434 ரன்களையும் குவித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரபல பாலிவுட் இசையமைப்பாளருமான பலாஷ் முச்சலும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றன. இதையடுத்து இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் பரவிய நிலையில், சமீபத்தில் இந்திய மகளிர் அணி உலகக் கோப்பையை வென்ற டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் பலாஷ் முச்சல் மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் மோதிரம் மாற்றிக்கொள்ளும் காணொளிகளும் வைரலாகின.