‘வா வாத்தியார்’ பிரச்சினைக்கு முடிவு: ஜன.14-ம் தேதி வெளியீடு

‘வா வாத்தியார்’ பிரச்சினைக்கு முடிவு: ஜன.14-ம் தேதி வெளியீடு

‘வா வாத்தியார்’ பிரச்சினைக்கு முடிவு எட்டப்பட்டு ஜனவரி 14-ம் தேதி வெளியிடும் வகையில் வெளியீட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினால் இப்படம் வெளியாகாமல் இருந்தது. ரூ.21 கோடி செலுத்திவிட்டு படத்தினை வெளியிடலாம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால், இப்படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது.

தற்போது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இப்பணத்தினை தயார் செய்துவிட்டார் என்கிறார்கள். இதனாலேயே தைரியமாக ஜனவரி 14-ம் தேதி வெளியீடு என்று விளம்பரப்படுத்தி வருகிறார்கள். நாளை (ஜனவரி 12) உயர் நீதிமன்றத்தில் பணத்தினை செலுத்தி தடையினை நீக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதனால் ஜனவரி 14-ம் தேதி வெளியீட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என படக்குழு சார்பில் விநியோகஸ்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.