தமிழ் நடிகைகள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? இயக்குநர் மாரி செல்வராஜிற்கு பிரபல நடிகை கேள்வி!

தமிழ் நடிகைகள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? இயக்குநர் மாரி செல்வராஜிற்கு பிரபல நடிகை கேள்வி!

தமிழ் சினிமாவில் உள்ள அர்ப்பணிப்பான நடிகைகள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? என இயக்குநர் மாரி செல்வராஜிற்கு நடிகை ஆராத்யா கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் ஆனந்தராஜ், நடிகை சம்யுக்தா, நடிகை சகிலா தீபா, ஆராத்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ’மதராஸ் மாஃபியா கம்பெனி’. இத் திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் மற்றும் பேரரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் நடிகை சம்யுத்தா பேசுகையில், "சினிமாவில் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பது மிகப்பெரிய சவால். நிறம், கல்யாணம் ஆகாதவர்களாக இருக்க வேண்டும், அப்படியே கல்யாணம் ஆனவர்களாக இருந்தால் குழந்தை இருப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் வேலைக்கு ஆகாது என்பார்கள். பெண்களுக்கு இப்படிப்பட்ட துரதிருஷ்டவசமான நிலை உள்ளது” என்றார்.

படத்தில் நடித்த நடிகை ஆராத்யா பேசுகையில், ”இயக்குநர் மாரி செல்வராஜ், ஒரு பேட்டியில் நான் மலையாள கதாநாயகிகளை காரணம் இன்றி தேர்வு செய்வதில்லை, என் கதைக்கு ஒரு அர்ப்பணிப்பான நடிகை வேண்டும் என்பதற்காக தேர்வு செய்கிறேன், எந்த ஊர், மொழி என்பதை பார்ப்பதில்லை என பேசி இருந்தார். இங்கே நாங்களும் தமிழில் அர்ப்பணிப்பான நடிகைகளாக உள்ளோம். நானும் ’காந்தி கண்ணாடி’ என்ற திரைப்படத்தில் நடிகை அர்ச்சனாவின் இளவயது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அது தவிர கமர்ஷியல் திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறேன்.

நடிகர் ஆனந்தராஜ் பேசுகையில், “இசையமைப்பாளரை ஸ்ரீகாந்த் தேவாவை குழந்தையிலிருந்து பார்த்து வருகிறேன் என கூறுவதில் பெருமையாக உள்ளது. பணம் சம்பாதிக்கலாம், ஆனால் பணமே வாழ்க்கை ஆகிவிடக்கூடாது. பணம் அதிகம் வந்துவிட்டால் பணத்திற்கு தான் மதிப்பு கொடுப்போம், மகிழ்ச்சி போய்விடும். இதெல்லாம் ரஜினிகாந்த் போல் ஒரு பெரிய நடிகர் சொன்னால் கேட்பீர்கள், நான் சொன்னால் கேட்பீர்களா? என தெரியவில்லை.

நான் ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே செல்வமணி எல்லாம் சினிமாவில் போராடி வந்திருக்கிறோம். நான் சினிமாவில் ஒரு நடிகனாக நிற்கிறேன் என்றால், அதற்கு என்னுடைய அப்பாவும் ஒரு காரணம். இப்படத்தின் கதாநாயகனாக இல்லாமல் கதையின் நாயகனாக நடித்துள்ளேன். தயவு செய்து கலையை கலையாக பாருங்கள்” என கேட்டுக் கொண்டார்.