தவெக விஜயுடன் கூட்டணியா? - பிரேமலதா விஜயகாந்த் பதில்
தவெக விஜயுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.
அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், விஜயகாந்த் உருவம் தாங்கிய ‘கேப்டன் ரத யாத்திரை’ (மக்களை தேடி மக்கள் ரத யாத்திரை) தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கேப்டன் ரத யாத்திரைக்காக தூத்துக்குடி மாவட்டம் வந்த பிரேமலதா, திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதற்காக, கோயிலுக்கு வந்த அவர், கடலில் கால் நனைத்து, சூரிய பகவானை வழிபட்டார். அப்போது, கடற்கரையிலிருந்து கோயில் வரை நடந்து வந்த பிரேமலதாவை பார்த்த பக்தர்கள் உற்சாகத்துடன் கேப்டன் வாழ்க.. கேப்டன் வாழ்க எனக் கோஷமிட்டனர்.
சாமி தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “மக்களை தேடி மக்கள் ரத யாத்திரை தொடர்பாக கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் பிப்.3 ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் உள்ளது. அந்த வகையில் இன்று தூத்துக்குடி வருகை தந்துள்ளோம். தொடர்ந்து, திருச்செந்தூர் முருகனை சந்தித்து, அவரது ஆசி பெறுவதற்காக வருகை தந்துள்ளேன். நல்ல தரிசனம் கிடைத்தது” என்றார்.
அதையடுத்து தவெக கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். எங்களது கட்சி நிர்வாகிகள் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கேட்கிறார்களோ, அதன்படியே நாங்கள் கூட்டணி வைப்போம். எனவே, உரிய நேரத்தில் கூட்டணி குறித்த நல்ல முடிவை அறிவிப்போம். இதை தான் ஒவ்வொரு முறையும் சொல்லி வருகிறேன். முருகன் அருளால் நிச்சயம் ஒரு மகத்தான கூட்டணி அமையும். அந்த கூட்டணி எல்லோருக்கும் நன்மை பயக்கும் கூட்டணியாக நிச்சயம் இருக்கும். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டுக்கும், மக்களுக்கும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தலாக அமையும். எனவே, நல்ல கூட்டணியை நிச்சயம் அமைப்போம்" என்று தெரிவித்தார்.