குடியரசு தினவிழா: 7,500 போலீசார் குவிப்பு - சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
77வது குடியரசு தினம் நாளை (ஜன.26) நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றவுள்ளார். இதற்காக, காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
7,500 போலீசார் குவிப்பு
மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில், காவல் கூடுதல் ஆணையாளர்கள், காவல் இணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 7,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
தீவிர சோதனை
இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை நகரின் முக்கிய நுழைவு பகுதிகளான மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், மீனம்பாக்கம், துரைப்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகனத் தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுதவிர, மக்கள் அதிகம் கூடும் இடங்களான மீனம்பாக்கம் விமான நிலையம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து முனையங்கள் உட்பட அனைத்து முக்கிய இடங்களிலும், வெடிகுண்டு நிபுணர்கள் மூலமும், மோப்ப நாய் மூலமாகவும் நாசவேலை தடுப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ட்ரோன் பறக்க தடை
மேலும், குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் அரசு விழாக்கள் தவிர மெரினா கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ராஜ்பவன் முதல் மெரினா கடற்கரை வரை; தமிழக முதலமைச்சர் இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரை வரையில் செல்லும் வழித்தடங்கள் சிகப்பு மண்டலமாக (RED ZONE) அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளில் ட்ரோன் உள்ளிட்ட எந்தவிதமான பொருட்களும் பறக்க விட தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி பொருட்களை பறக்கவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கப்பட்டுள்ளது.