ஆட்சியில் பங்கு கேட்பதில் என்ன தவறு? புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி

ஆட்சியில் பங்கு கேட்பதில் என்ன தவறு? புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி

பிப்ரவரி 14 அல்லது 15 ஆம் தேதி எங்களது கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிப்போம் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் அதன் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "2026 சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி நிலைப்பாடு குறித்து ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருப்பீர்கள். பொதுவாக சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் தேதி அறிவிக்கப்பட்ட பின் கூட்டணி குறித்து சொல்லப்படும்.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக தேர்தல் தேதி அறிவிக்கவே இன்னும் ஒன்றரை மாதம் இருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்தும் ஜனவரி 7 ஆம் தேதி மாநில மாநாடு நடத்தினோம். இது வெற்றிகரமாக அமைந்தது.

சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் 50% மேற்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறும் வகையில் தான் புதிய தமிழகம் கட்சி கூட்டணி அமைக்கும்.

திமுக, காங்கிரஸ், விசிக என ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு தளத்தில் இயங்குகின்றன. எல்லோருக்கும் அதிகாரம் இருந்தால் தான் செயல்படுத்த முடியும். தனித்து போட்டி என்பதை பற்றி சிந்திக்கவில்லை. தனித்து போட்டி என்ற பேச்சுக்கு இடமில்லை, கூட்டணி அமைத்து தான் போட்டி. அதிமுக கூட்டணியில் இருந்து நான் வெளியேறவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து எனக்கு நேரடியாக அழைப்பு வரவில்லை" என்றார்.

அதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் உடன் பேச்சுவாரத்தை உள்ளதா? என்ற கேள்விக்கு, புதிய கட்சிகள் உடன் பேச்சுவார்த்தை எதுவும் இல்லை என்று பதில் அளித்தார்.

மேலும், "புதிய தமிழகம் கட்சி சட்டப் பேரவைத் தேர்தலில் 10 சீட் மட்டுமின்றி ராஜ்ய சபா சீட் கேட்பதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு, ராஜ்ய சபா சீட் கொடுப்பதால் என்ன தவறு? நான் டிமாண்ட் செய்யவில்லை கேட்டால் என்ன தவறு? என்றார். பிப்ரவரி மாதம் 14 அல்லது 15 ஆம் தேதிகளில் புதிய தமிழகம் கட்சி தன் நிலைப்பாட்டை அறிவிக்கும். பொறுமையாக நல்ல கூட்டணியில் பங்கேற்று வெற்றி பெறுவோம். எங்கள் பங்களிப்பு அந்த கூட்டணிக்கு பலமாக இருக்கும்" என்றார்.