விஜய் தனித்துவமாக இயங்க வேண்டும் - திருமாவளவன் பேட்டி

விஜய் தனித்துவமாக இயங்க வேண்டும் - திருமாவளவன் பேட்டி

தவெக தலைவர் விஜய் தனித்துவமாக இயங்க வேண்டும் என்பதே எனது ஆசை. பாஜகவுடன் விஜய் காட்டுகிற இணக்கம் மற்றும் அணுகுமுறை நிச்சயம் அவருக்கு பயன் தராது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை அருகே ஆவடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கலந்து கொண்டு, ஈழ விடுதலைக் களத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “புதிதாக இலங்கையில் அமைந்துள்ள அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசு, புதிய அரசியலமைப்பு சட்டம் இயற்றுவதற்கு முயற்சித்து வருவதாக தகவல் வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு கூட்டாட்சி முறையை உறுதி செய்ய வேண்டும். ஈழ தமிழர்களுக்கான தாயகத்தை அங்கீகரித்து, தன்னாட்சி அதிகாரத்தை வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி எழுதுவதற்கு இந்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “செங்கோட்டையன் எந்த பின்னணியில் தவெகவில் இணைந்தார் என்பது தெரியாது. ஆனால், தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் நகர்வுகளில், ஒவ்வொரு அங்குலத்திலும் பாஜவின் கைகள் உள்ளன. அதை மறுக்க முடியாது. தவெக தனித்துவத்துடன் இயங்குகிறது என்ற நம்பிக்கையை பெற்றால் தான், மக்கள் அந்த கட்சி மீது நம்பிக்கை வைப்பார்கள்.

அவ்வாறு இல்லாமல், பாஜகவுடன் இணக்கமாக இருக்கிற தோற்றம் உருவானால், தமிழக மக்கள் அந்த கட்சியை எதிரியாக தான் பார்ப்பார்கள். பாஜகவுடன் உறவு வைத்துக் கொள்வதை சீர்தூக்கி பார்க்கும் அணுகுமுறை தமிழக மக்களிடம் மேலோங்கி இருக்கிறது. எனவே, பாஜகவுடன் தவெக இணக்கம் காட்டினால், அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் தான் சீராய்வு செய்து பார்க்க வேண்டும்.

விஜய் மீது எனக்கு நல்ல மதிப்பு உண்டு. அவர் அரசியலுக்கு வந்ததை முதன் முதலில் வரவேற்றவன் நான். அவர் தனித்துவமாக இயங்க வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால், தற்போது நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது விஜய் அப்படி இயங்கவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. பாஜகவுடன் விஜய் காட்டுகிற இணக்கம், அணுகுமுறை அவருக்கு பயன் தராது.

அதிமுகவின் இந்த குழப்பமான, விமர்சிக்கப்படும் சூழ்நிலைக்கு பாஜகவும் காரணம் என அதிமுகவினர் உணர்வார்கள். தமிழகத்தை குறி வைத்து பாஜக உள்ளிட்ட சங்பரிவார்கள் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே, தமிழக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று திருமாவளவன் கேட்டுக் கொண்டார்.