சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? தமிழ்நாடு அரசுக்கு கேள்வி

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? தமிழ்நாடு அரசுக்கு கேள்வி

 அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை அண்ணா நகரை சேர்ந்த 10 வயது சிறுமியின் உடலில் மாற்றம் தென்பட்டதை அடுத்து அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை பெற்றோர் அழைத்து சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

உடனடியாக, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். சிறுமியிடம் மருத்துவமனை வளாகத்தில் கீழ்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜி விசாரணை செய்தார். பின்னர், சிறுமியின் தாயை காவல் நிலையத்திற்கு அழைத்து தாக்குதல் நடத்தியுள்ளார். தொடர்ந்து, சிறுமியின் தந்தையை விசாரணைக்கு அழைத்து, சமாதானமும் செய்ய காவல் துறை முயற்சி செய்தது. சமாதானத்தை ஏற்க மறுத்ததால் அவரையும் காவல் ஆய்வாளர் தாக்கினார். இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலம் சமூக வளைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு தடை விதித்ததுடன், சென்னை காவல் இணை ஆணையர் சரோஜ் குமார் தாக்கூர் தலைமையில் ஆவடி சரக சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் மாநகர வடக்குத் துணை ஆணையர் பிருந்தா ஆகியோரை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டது. மேலும், இந்த குழு தனது விசாரணை அறிக்கையை வாரந்தோறும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இழப்பீடு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 1 லட்சம் ரூபாயுடன், மேலும் 3 லட்சம் ரூபாய் வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

அப்போது நீதிபதிகள், "உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால், உச்ச நீதிமன்றத்துக்கு அரசு செல்கிறது. ஒவ்வொரு வழக்கிலும் பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றம் செல்ல முடியுமா? இந்த வழக்கில் காவல் துறை விசாரணை சரியாக நடைபெறவில்லை. காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி வழக்கை திசை திருப்பும் வேலையை அரசு செய்ய வேண்டாம்.

இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இடைநீக்கம், ஒழுங்கு நடவடிக்கை என்பது அரசு அதிகாரிகளுக்கு எதிராக பொதுவாக நடவடிக்கையாகி விட்டது.

கடந்த 2024 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டும் கடந்த 15 மாதங்களாக காவல் ஆய்வாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? தவறு செய்தவரை காப்பாற்ற அரசு ஏன் முயற்சி செய்கிறது? காவலர்கள் மக்களை காப்பாற்றுவதற்கு தான், வேலியே பயிரை மேய்வதை அனுமதிக்க முடியாது" என தெரிவித்த நீதிபதிகள், காவல் ஆய்வாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நாளை (ஜன 30) பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.