‘ரெட் அலர்ட்’ - 1.24 கோடி பேருக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி
கனமழை தொடர்பாக தமிழகத்தில் 1.24 கோடி பேருக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
புயல், மழை பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களைத் தங்கவைக்க திருமண மண்டபங்கள், அவர்களுக்குத் தேவையான உணவு, குழந்தைகளுக்கு பால் போன்றவற்றை தயாராக வைக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் மாநில பேரிடர் மீட்புப்படை சார்பில் 16 அணிகளும், தேசிய பேரிடர் மீட்புப்படை சார்பில் 12 அணிகளும் தயார் நிலையில் உள்ளன.
இதுவரை புயல், மழையால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. 16 கால்நடைகள் இறந்துள்ளன. 24 குடிசைகள் சேதமடைந்துள்ளன. புயல் வந்தால், அதை எதிர்கொள்வது தொடர்பாக 1.24 கோடி பேருக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் கடற்கரை ஓரமாகச் செல்வதை தவிர்க்க வேண்டும். புயல் நேரத்தில் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
4,000 கனஅடி வெளியேற்றம்: சென்னைக்கு குடிநீர் விநியோகிக்கும் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் இருந்து நேற்று மாலை முதல் விநாடிக்கு 4,000 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 2,000 கனஅடியும், புழல் ஏரியிலிருந்து 1,500 கனஅடியும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.