ஆஸ்திரேலியா டி20 பிளேயிங் லெவன் அறிவிப்பு: அறிமுக வீரர்களுக்கு இடம்

ஆஸ்திரேலியா டி20 பிளேயிங் லெவன் அறிவிப்பு: அறிமுக வீரர்களுக்கு இடம்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக டிராவிஸ் ஹெட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில், இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றன. இந்த நிலையில், இப்போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதில் அணியின் கேப்டனாக மிட்செல் மார்ஷுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதன் காரணமாக, டிராவிஸ் ஹெட் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிம் டேவிட் ஆகியோருக்கு பதில் ஆஸ்திரேலிய டி20 அணியில் வாய்ப்பு பெற்ற அறிமுக வீரர்கள் மஹ்லி பியர்ட்மேன், ஜேக் எட்வர்ட்ஸ், மேத்யூ ரென்ஷா ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பேஷ் லீக் டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அணியில் வாய்ப்பு பெற்ற நிலையில், தற்சமயம் பிளேயிங் லெவனிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு மிட்செல் ஓவன், கேமரூன் க்ரீன், மேத்யூ ஷார்ட், ஆடம் ஜாம்பா மற்றும் சேவியர் பார்ட்லெட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இந்த பிளேயிங் லெவனில் இடம் பிடித்துள்ளனர்.

  • ஆஸ்திரேலிய டி20 அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், மஹ்லி பியர்ட்மேன், கூப்பர் கானோலி, பென் துவார்ஷூயிஸ், ஜாக் எட்வர்ட்ஸ், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மேத்யூ குன்னெமன், மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜாம்பா.
  • பாகிஸ்தான் டி20 அணி: சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் ஆசம், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகர் ஜமான், கவாஜா முகமது நஃபி, முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, நசீம் ஷா, சாஹிப்சாதா ஃபர்ஹான் , சைம் அயூப், ஷஹீன் ஷா அஃப்ரிடி, ஷதாப் கான், உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்.