இந்தியா நஞ்சான 'கோல்ட்ரிஃப்' இருமல் சிரப்: 20 குழந்தைகள் பலி- மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் சென்னையில் கைது

இந்தியா நஞ்சான 'கோல்ட்ரிஃப்' இருமல் சிரப்: 20 குழந்தைகள் பலி- மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் சென்னையில் கைது

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த குழந்தைகளின் மர்ம மரணங்களுக்குக் காரணமானதாகச் சந்தேகிக்கப்படும் ‘கோல்ட்ரிஃப்’ (Coldrif) இருமல் சிரப்பைத் தயாரித்த மருந்து நிறுவனத்தின் 75 வயது உரிமையாளர் ஜி. ரங்கநாதன், சென்னையில் இன்று அதிகாலை அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.     

மத்தியப் பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில், 'கோல்ட்ரிஃப்' சிரப் அருந்திய பல சிறுவர்-சிறுமிகள் திடீரெனச் சிறுநீரகச் செயலிழப்பால் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கோல்ட்ரிஃப் சிரப் மாதிரிகளைச் சென்னை அரசு மருந்துகள் பகுப்பாய்வுக் கூடத்தில் ஆய்வு செய்ததில், அதில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

அந்த இருமல் சிரப்பில், 'டையெத்திலீன் கிளைகால்' (Diethylene Glycol) என்னும் உயிர்க்கொல்லி நச்சு வேதிப்பொருள் 48.6 சதவீதம் அளவுக்குக் கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இது, பெயிண்ட் மற்றும் பிரேக் திரவங்களில் பயன்படுத்தப்படும் விஷத்தன்மை கொண்ட ரசாயனம் ஆகும். இந்த நச்சு கலந்த மருந்தை உட்கொண்டதால்தான் பிஞ்சு குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

மத்தியப் பிரதேச காவல் துறையின் துணைக் கண்காணிப்பாளர் ஜிதேந்திர ஜாட் தலைமையிலான ஏழு பேர் கொண்ட சிறப்புக் குழு, சென்னைக்கு விரைந்தது. கோடம்பாக்கம், அசோக் நகரில் உள்ள ரங்கநாதனின் இல்லத்தில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு உட்பட மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா போன்ற பல மாநிலங்களில் கோல்ட்ரிஃப் இருமல் சிரப் விற்பனை மற்றும் விநியோகத்துக்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற, நச்சு கலந்த மருந்தைத் தயாரித்து, குழந்தைகள் மரணத்திற்குக் காரணமாக இருந்த மருந்து நிறுவன உரிமையாளரின் கைது, தவறான மருந்து உற்பத்தியில் ஈடுபடுவோருக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.