புழல் சிறையில் போர்வை தகராறில் கைதிகளுக்கு இடையே மோதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு
புழல் சிறையில் போர்வை தகராறில் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் சக விசாரணை கைதியை தாக்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, மேடவாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (23) என்பவர் கடந்த ஆண்டு பள்ளிக்கரணை போலீசாரால் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதே போல சென்னை எழும்பூரை சேர்ந்த அருண் குமார் என்பவர் கொலை வழக்கிலும், கார்த்திக் என்பவர் அடிதடி வழக்கிலும், எண்ணூரை சேர்ந்த தீபன் (23), தரணி (27), ரமேஷ் (30) ஆகியோர் கஞ்சா வழக்கிலும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை கைதிகளாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விசாரணை கைதிகள் ஆறு பேரும் ஒரே அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 19 ஆம் தேதி மணிகண்டனுக்கும், சக கைதிகளான அருண்குமார், கார்த்திக், தீபன், தரணி, ரமேஷ் ஆகியோருக்கும் இடையே சாதி ரீதியான பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அது பின்னர் போர்வை பயன்படுத்துவது தொடர்பாக தகராறாகவும் வெடித்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அடைந்த அருண்குமார், கார்த்திக், தீபன், தரணி, ரமேஷ் ஆகிய ஐந்து பேரும் நேற்று இரவு (ஜன.21) அறையில் சக கைதி மணிகண்டனை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த மணிகண்டன் சிறை வளாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து சிறை வார்டன் திருமலை புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அதன் பேரில் காவல் துறையினர் விசாரணை கைதிகள் அருண்குமார், கார்த்திக், தீபன், தரணி, ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.