பிரான்சில் யுபிஐ அறிமுகத்துக்குப் பிறகு இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை 40% அதிகரிப்பு

இந்தியாவின் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை பிரான்சில் அறிமுகப்படுத்தியதற்குப் பிறகு அங்கு இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக பிரெஞ்சு நிறுவனமான லைரா நெட்வொர்க்கின் தலைவர் கிறிஸ்டோப் மரியெட் தெரிவித்துள்ளார்.
குளோபல் பின்டெக் மாநாட்டில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து கூறியுள்ளதாவது:ஒரு வருடத்திற்கு முன்பாக இந்தியாவின் யுபிஐ வசதியை பிரான்சின் ஈபிள் கோபுரத்தில் அறிமுகப்படுத்தினோம். சில வாரங்களுக்கு முன்னதாக ஈபிள் கோபுரத்தின் பொது மேலாளருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக அவர் கூறியது வியப்பை ஏற்படுத்தியது.
இந்திய சுற்றுலாப் பயணிகள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது யுபிஐ போன்ற பழக்கமான டிஜிட்டல் கட்டண முறைகளை பயன்படுத்துகையில் மிகவும் வசதியாகவும், பாதுகாப்பாகவும் உணர்கின்றனர். விரைவில் பிரான்சின் பைசெஸ்டர் வில்லேஜ் ஷாப்பிங் மையத்திலும் யுபிஐ வசதி அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு கிறிஸ்டோப் மரியெட் தெரிவித்தார்.