முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியுடன் கால்பந்து ஆடிய மெஸ்ஸி; நேரில் கண்டு ரசித்த ராகுல் காந்தி
ஹைதராபாத் உப்பலில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியுடன், மெஸ்ஸி கால்பந்து ஆடினார். இதனை ராகுல் காந்தி நேரில் கண்டுகளித்தார்.
அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேப்டனும், கால்பந்து விளையாட்டின் ஜாம்பவானுமான மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, 'தி கோட் டூர்' நிகழ்ச்சியில் லியோனல் மெஸ்ஸி கலந்து கொள்ள உள்ளார்.
அந்தவகையில் கொல்கத்தா வந்த மெஸ்ஸி லேக்டவுன் பகுதியில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது உருவச்சிலையை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இதன் பின்னர் சால்ட் லேக் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மெஸ்ஸி கலந்துகொண்டார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் சூழ்ந்திருந்ததால் ரசிகர்கள் அவரை பார்க்க முடியாமல் தவித்தனர்.
இதற்கிடையே வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே மேடையில் இருந்த மெஸ்ஸி மைதானத்தைவிட்டு வெளியேறினார். இதில் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டிலை எறிந்தும், மேடையை அடித்து நொறுக்கியும், வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு மெஸ்ஸி ஹைதராபாத் வந்தடைந்தார். ஷம்ஷாபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு தெலங்கானா அரசின் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஃபலக்னுமா அரண்மனையில் நடந்த நிகழ்ச்சியில் மெஸ்ஸி கலந்து கொண்டார். பின்னர், மாலை 6.30 மணிக்கு மெஸ்ஸி உப்பலில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்திற்கு வந்து தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியுடன் நட்புரீதியான ஆட்டத்தில் விளையாடினார்.
அப்போது பார்வையாளர்கள் சிலர் 'மெஸ்ஸி' என, எழுதப்பட்ட ஜெர்சி அணிந்திருந்தனர். மெஸ்ஸி ஆல் ஸ்டார் லெவன் அணி வீரர்களுடனும், ரேவந்த் ரெட்டியுடனும் கைகுலுக்கினார். இந்த ஆட்டத்தில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தனது திறமையை வெளிப்படுத்தி அணிக்காக நான்காவது கோலை அடித்தார். மெஸ்ஸியும், ரேவந்த் ரெட்டியும் சிறிது நேரம் பாஸ்களை பரிமாறி கொண்டு இருந்த காட்சி கால்பந்து ரசிகர்களை மெய்மறக்க செய்தது.
பின்னர் மெஸ்ஸியும், தெலங்கானா முதல்வரும் ஷட்டர்பக்ஸுக்கு போஸ் கொடுத்தனர். 38 வயதான அவர், ''மெஸ்ஸி, மெஸ்ஸி'' என்ற கோஷத்துக்கு மத்தியில் கூட்டத்தினரை நோக்கி கையசைத்தார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தியும் மைதானத்தில் இருந்தார்.
இது பற்றி மெஸ்ஸி கூறுகையில், "எனக்கு கிடைக்கும் பாசத்துக்கு நன்றி. ஹைதராபாத்தில் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்" என கூறினார். மெஸ்ஸி வருகையை முன்னிட்டு தெலங்கானா காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் நடந்த அசம்பாவிதம் போல் எதுவும் ஆகிவிடக் கூடாது என, தெலங்கானா காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.