பிப்ரவரி 7 முதல் தொடங்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மற்றும் இறுதிப் போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த அண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் (பிசிசிஐ) நடத்தவுள்ளது. முன்னதாக போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் மட்டுமே நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் எல்லை பிரச்சனை காரணமாக, பாகிஸ்தான் அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் பொதுவான இடத்திற்கு மாற்றப்பட்டிருந்தன.
அதன்படி, பாகிஸ்தான் அணி பங்கேற்கும் போட்டிகளை இலங்கையில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. இம்முறை மொத்தம் 20 அணிகள் பங்கேற்க இருப்பதால், இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கும் இந்திய அணி, கோப்பையை தக்கவைக்குமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
சமீப காலமாகவே இந்திய அணி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆதிக்கத்தை செலுத்தி வருவதன் காரணமாக, சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் இந்த தொடரிலும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன. இந்த நிலையில், எதிவரும் ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் தொடரானது எப்போது தொடங்கும், போட்டிகள் எந்தெந்த மைதானங்களில் நடத்தப்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊடக அறிக்கைகளின்படி, ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி, தொடரின் இறுதிப் போட்டியானது மார்ச் 8ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட நான்கு இடங்களிலும், இலங்கையில் கொழும்பு மற்றும் கலே என இரண்டு இடங்களிலும் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
மேற்கொண்டு இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும், அரையிறுதி போட்டிகள் மும்பையிலும், இறுதிப்போட்டி அஹ்மதாபாத்திலும் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் பாகிஸ்தான் அணி அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் பட்சத்தில், அப்போட்டிகள் இலங்கையில் நடத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.