ரோஹித் சர்மா, விராட் கோலியின் அனுபவத்தை புறக்கணிக்க முடியாது: சொல்கிறார் ஷுப்மன் கில்

சீனியர் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான திட்டங்களின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள், அவர்களின் திறன், மகத்தான அனுபவத்தை புறக்கணிக்க முடியாது என இந்திய ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணியின் புதிய கேப்டன் ஷுப்மன் கில் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இம்மாதத்தின் 3-வது வாரத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இதில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கு ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சீனியர் பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விடுக்கப்பட்டுள்ளார். அவருடன், மற்றொரு சீனியர் பேட்ஸ்மேனுமான விராட் கோலியும் ஆஸ்திரேலிய தொடரில் விளையாட உள்ளார்.
இந்நிலையில் ஷுப்மன் கில் கூறியதாவது: ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான திட்டங்களின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவுக்காக அதிகளவில் போட்டிகளை வென்றுள்ளனர், அதிக அனுபவம் கொண்டவர்கள். இந்தியாவுக்காக இவ்வளவு போட்டிகளில் வென்ற வீரர்கள் சிலரே உள்ளனர்.
எனது நாட்டை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வழிநடத்த உள்ளதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். நான் நிகழ்காலத்தில் முடிந்தவரை இருக்க விரும்புகிறேன், என்னால் எதை சாதிக்க முடிந்தது அல்லது ஒரு அணியாக நாங்கள் என்ன சாதித்தோம் என்பதைத் திரும்பிப் பார்க்க விரும்பவில்லை. வரவிருக்கும் மாதங்களில் எங்களிடம் உள்ள அனைத்தையும் எதிர்நோக்கி வெல்ல விரும்புகிறேன்.
நான் எல்லா வடிவங்களிலும் விளையாட விரும்புகிறேன், நாட்டிற்காக எல்லா வடிவங்களிலும் வெற்றிபெற விரும்புகிறேன். ஐசிசி சாம்பியன் பட்டங்களை வெல்லவும் விரும்புகிறேன். நான் அதைச் செய்ய விரும்பினால், மூன்று வடிவங்களிலும் விளையாட வேண்டும். இது நான் கடக்க வேண்டிய சவால் ஆகும். இவ்வாறு ஷுப்மன் கில் கூறினார்.