மீண்டும் திரையரங்குகளில் வெளியான ’பாகுபலி’ என்ற பிரமாண்டம் - ரசிகர்கள் கொண்டாட்டம்!
பாகுபலி படத்தின் இரண்டு பாகமும் ஒன்றிணைக்கப்பட்டு, ’பாகுபலி தி எபிக்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு பெரும் செலவிலும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் வெளியான திரைப்படம் 'பாகுபலி'. இதில் பிரபாஸ், அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன், ராணா டகுபதி, நாசர், சத்யராஜ் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். பாகுபலி திரைப்படம் இந்திய சினிமாவில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. படம் வெளியானது முதல் இந்திய சினிமாவின் அடையாளமாக மாறி தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் சுமார் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.
பாகுபலி முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் கட்டப்பா பாகுபலியை கொன்றது ஏன்? என்ற கேள்வியுடன் முடிக்கப்பட்டிருந்தது. இது பாகுபலி இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான ‘பாகுபலி 2’ பிரம்மாண்ட வெற்றி பெற்றது. உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தில் பாகுபலி கதாபாத்திரத்தில் நடித்த பிரபாஸ் முதல் கட்டப்பாவாக நடித்த சத்யராஜ் வரை அனைவரது கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றது.
கீரவாணி இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் படத்தின் பிரமாண்டத்திற்கு ஈடு கொடுக்கும் அளவில் இடம்பெற்றிருந்தது. ’பாகுபலி’ திரைப்படம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் செட் உருவாக்கப்பட்டு படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்கள், கவசங்கள், அரங்கங்கள் போன்றவை தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது.
பாகுபலி படத்தின் செட் அன்றைய காலகட்டத்திலேயே சுமார் 50 கோடிக்கு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாகுபலி திரைப்படம் இந்திய சினிமாவில் கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படும் நிலையில், அப்படத்திற்கு உருவாக்கப்பட்ட செட் தற்போதும் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகுபலி திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 'பாகுபாலி' படத்தை ரி-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு, அதற்கான வேலைகள் கடந்த சில மாதங்களில் விரைவாக நடைபெற்றது. பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் ஒன்றிணைக்கப்பட்டு, 3 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடக்கூடிய 'பாகுபலி தி எபிக்' (baahubali the epic) திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பாகுபலி திரைப்படம் சவுண்ட் மற்றும் விஷுவல் காட்சிகள் மேம்படுத்தப்பட்டு, புதிய பரிணாமத்தில் வெளியாகியுள்ளது.
சென்னையில் தனியார் திரையரங்கில் 'பாகுபலி தி எபிக்' (baahubali the epic) திரைப்படம் பார்த்த ஜனனி பேசுகையில், ”10 வருடங்களுக்கு முன்பு திரைப்படம் பார்க்கிறோம் என்ற உணர்வு இல்லை, இப்போதும் புதிய திரைப்படமாக உள்ளது. அடுத்த காட்சி எப்படி இருக்கும் என்கின்ற எதிர்பார்ப்பு சற்றும் குறையாத வண்ணம் விறுவிறுப்பாக உள்ளது. புதிதாக சிறப்பு சத்தங்கள், காட்சியில் ஒளியில் சற்று வித்தியாசம், போன்றவை அருமையாக அமைந்துள்ளது.
படத்தின் இயக்குநர் ராஜமவுலி இப்படிப்பட்ட கதையினை எப்படி தான் யோசித்தார் என்று நாங்கள் வியந்து பார்க்கிறோம். தனிப்பட்ட முறையில் பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோரது கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும். இப்படத்தின் இறுதியில் ’baahubali the eternal war’ என்ற அனிமேஷன் திரைப்படம் 2027இல் வெளியாகும் என கிளைமாக்ஸில் கூறப்பட்டுள்ளது” என்றார்.