சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு ‘கிட்னிகள் ஜாக்கிரதை’ பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர்!

சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு ‘கிட்னிகள் ஜாக்கிரதை’ பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர்!

தமிழ்நாடு சட்டப்பேரவை 3ஆம் நாள் கூட்டத்தொடருக்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என பேட்ஜ் அணிந்து வந்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கியது. பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு நடுவே, 6 மாதங்களுக்குப் பிறகு சட்டப்பேரவைக் கூடியிருக்கிறது. நேற்றைய கூட்டத்தொடரில், கரூர் கூட்டநெரிசல் மரணம் தொடர்பான விவாதத்தின்போது, அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

மூன்றாம் நாளான இன்று மானிய கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெறவுள்ளது. மேலும், 7 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பெரம்பலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் நடைபெற்ற கிட்னி திருட்டு விவகாரத்தை சுட்டிக்காட்டும் வகையில், ‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என்ற பேட்ஜ் அணிந்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று கூட்டத்தொடருக்கு வருகை தந்துள்ளனர்.

அதேபோல் பாமக அன்புமணி ராமதாஸ் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கறுப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர். ஜி.கே.மணியை பாமக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்; சேலம் மேற்கு பாமக சட்டப்பேரவை உறுப்பினர் அருளை பாமக-வில் இருந்து நீக்கி விட்டதால், அவரை பாமக உறுப்பினராக ஆவணங்களில் பதிவு செய்யக்கூடாது; தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசனை சட்டப்பேரவைக் குழு தலைவராக அங்கீகரித்து முதல் வரிசையில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை சபாநாயகர் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தாங்கள் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாமக சட்டமன்ற குழுத் தலைவராக வெங்கடேஸ்வரனையும், கொறடாவாக சிவக்குமாரையும், துணை கொறடாவாக சதாசிவத்தையும் நியமிக்க வேண்டும் என சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருக்கும் நிலையில், விரைவில் அதற்கு பதில் சொல்வதாக சபாநாயகர் கூறியிருக்கிறார்.

இன்று காலை 9:30 மணிக்கு மூன்றாம் நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது. அவை தொடங்கியதிலிருந்து வினாக்கள் - விடைகள் நேரம் நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்கள் முக்கிய பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப உள்ளனர். அதன்படி இன்று கிட்னி திருட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, இருமல் மருந்து விவகாரம் உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ச்சியாக பல்வேறு சட்ட மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. குறிப்பாக, 2025-ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவு, 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு நீக்கறவு செய்தல் சட்ட முன்வடிவு, 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு நீக்கறவு செய்தல் (இரண்டாம்) திருத்தச் சட்ட முன்வடிவு ஆகியவற்றை அமைச்சர் துரைமுருகன் இன்று பேரவையில் தாக்கல் செய்கிறார்.