சாமானியர்களுக்கு எட்டாக்கனியாக மாறிவரும் தங்கம்! ஒரு கிராம் ரூ. 12 ஆயிரத்தை நெருங்குகிறது

நாளுக்கு நாள் புதிய உச்சம் கண்டுவரும் தங்கம் விலையானது இன்று கிராமுக்கு ரூ. 40 அதிகரித்து ரூ. 11,900-க்கும், சவரனுக்கு ரூ. 320 அதிகரித்து ரூ. 95,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நடுத்தர மக்களின் சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ரூ. 73 ஆயிரத்தில் இருந்த தங்கம் விலையானது இரண்டு மாதங்களில் ரூ. 20 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்திருக்கிறது.
குறிப்பாக, கடந்த வாரங்களில் ஓரிரு நாட்களைத் தவிர, இதர நாட்களில் ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை அதிகரித்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, 14ஆம் தேதி சவரனுக்கு ரூ. 1960 அதிகரித்தது. அதைத் தொடர்ந்து நேற்றும் சவரனுக்கு ரூ. 280 அதிகரித்து, ரூ. 94,880க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ. 95 ஆயிரத்தை தாண்டி வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.
உலக நாடுகள்மீதான அமெரிக்காவின் ஏற்றுமதி வரி விதிப்பு, உலக நாடுகளிடையேயான போர் பதற்றம் மற்றும் பல்வேறு நாடுகள் தங்கத்தின்மீது அதிகளவில் முதலீடு செய்வது போன்ற பல காரணங்களால் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1 லட்சத்தை தொடும் என ஏற்கனவே நிபுணர்கள் கணித்திருந்த நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் அந்த இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று கிராமுக்கு ரூ. 40 அதிகரித்து, 11,900க்கும், சவரனுக்கு ரூ. 320 அதிகரித்து, ரூ. 95,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 காரட் தங்கத்தின் விலையானது கிராமுக்கு ரூ.44 அதிகரித்து, ரூ.12,982க்கும், சவரனுக்கு ரூ.352 அதிகரித்து, ரூ.1,03,856க்கும் விற்பனை செய்யப்படுகிறது.