8 வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால் அலட்சியமா விடாதீங்க.. ஆபத்தில் முடியலாம்..!
பலருக்கும் அடிக்கடி இருமல் ஏற்படுவது பொதுவான ஒன்று, இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பல நோயாளிகளுக்கு இருமல் மிகவும் தொந்தரவான அறிகுறிகளில் ஒன்றாக இருக்கிறது. 3 வாரங்களுக்கும் குறைவாக நீடிக்கும் இருமல் acute என்றும், 3 முதல் 8 வாரங்கள் நீடிக்கும் இருமல் subacute என்றும் 8 வாரங்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் இருமல் chronic அதாவது நாள்பட்ட இருமல் என்று வகைப்படுத்தப்டுகிறது.
நாள்பட்ட இருமலுக்கான பொதுவான காரணங்களில் மூக்கிலிருந்து அல்லது சைனஸிலிருந்து சளி தொண்டையின் பின்புறம் சொட்டும் பாதிப்பான Post-nasal drip, ஆஸ்துமா மற்றும் GERD (ஆசிட் ரிஃப்ளக்ஸ்) போன்றவை அடங்கும். அது நேரம் சில சந்தர்ப்பங்களில் நீடித்த மற்றும் நாள்பட்ட இருமலானது நுரையீரல் தொற்று அல்லது COPD-ன் (Chronic Obstructive Pulmonary Disease) அறிகுறியாகவும் இருக்கலாம்.
COPD என்பது "நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்" அல்லது "நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய்" என்று குறிப்பிடப்படுகிறது. இது நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் எம்பிஸிமா போன்ற நிலைகளை உள்ளடக்கிய ஒரு தீவிர நுரையீரல் நோயாகும், இது முக்கியமாக சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதன் முக்கிய அறிகுறிகளில் நாள்பட்ட இருமலும் ஒன்று.
ஆனால் நாள்பட்ட இருமலை மக்கள் பெரும்பாலும் ஒரு அலர்ஜி என்று தவறாக நினைக்கிறார்கள், ஆனால் பல சந்தர்ப்பங்களில், தொடர்ச்சியான இருமல், ஒவ்வாமை என்பதை விட COPD பாதிப்பின் துவக்கநிலை என்பதை குறிக்கலாம். குறிப்பாக புகை போன்ற எரிச்சலூட்டும் பொருட்களால் ஏற்படும் நீண்டகால நுரையீரல் பாதிப்பையும் கூட இது குறிக்கலாம். நாள்பட்ட இருமலை ஆரம்பகால COPD-யிலிருந்து வேறுபடுத்திக் காட்ட, BLK-Max சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் முதன்மை இயக்குநரான டாக்டர் சந்தீப் நாயர், கூடுதல் அறிகுறிகள் மற்றும் கவனிக்க வேண்டிய சில எச்சரிக்கைளை கோடிட்டு காட்டுகிறார்:
சளி உற்பத்தி:COPD, குறிப்பாக நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சியானது, காற்றுப்பாதைகள் அதிகப்படியான சளியை உற்பத்தி செய்வதன் மூலம், தொடர்ச்சியான இருமல் ஏற்பட வழிவகுக்கிறது. நோயாளிகள் பெரும்பாலும் தடிமனான சளி வெளியேறுவது குறித்து கூறுகின்றனர், இது வெண்மையாகவோ அல்லது தொற்று ஏற்பட்டால் மஞ்சள் அல்லது பச்சை நிறமாகவோ கூட இருக்கலாம்.
எரிச்சலூட்டும் பொருட்களுக்கான வெளிப்பாடு:நுரையீரலை எரிச்சலூட்டும் பொருட்களுக்கு, குறிப்பாக சிகரெட் புகைக்கு நீண்டகாலமாக வெளிப்பட்டு வருவது நுரையீரல் பாதிப்பு மற்றும் இன்ஃப்ளமேஷனை ஏற்படுத்தும், இதன் விளைவாக நாள்பட்ட இருமல் ஏற்படலாம். புகைப்பழக்கம் COPD-க்கு மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாக இருந்தாலும், புகைபிடிக்காதவர்கள் இந்த நோய்க்கு பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுவாக நகர்ப்புறவாசிகள் தொடர்ந்து தீங்கு விளைவிக்கும் மாசுபாடுகளுக்கு ஆளாகிறார்கள், அதே நேரத்தில் கிராமப்புறங்களில், COPD அடிக்கடி சுல்ஹா புகையிலிருந்து (பாரம்பரிய மர அல்லது உயிரி அடுப்புகள்) உருவாகிறது.
செயல்பாடு குறைதல்:COPD பாதிப்பால் ciliary செயல்பாடு குறைவதாலும், சுவாச தசைகள் பலவீனமடைவதாலும் நுரையீரல் சளியை அகற்றும் திறனை படிப்படியாக இழக்கிறது. இதனால் இருமல் தொடர்ந்து நீடிக்கும். நோயாளிகள் பெரும்பாலும் தொண்டை எரிச்சல் மற்றும் அவ்வப்போது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளை எதிர்கொள்கிறார்கள்.
முன்கூட்டிய எச்சரிக்கை அறிகுறி:நாள்பட்ட இருமல், சிஓபிடியின் ஆரம்ப அம்சமாகவும், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தெளிவாக வெளிப்படும் முன்பே நோய் வலுவான ஆபத்து காரணியாகவும் இருக்கலாம்.மேற்கண்ட இந்த அறிகுறிகளை அனுபவிக்கும் எவரும் முறையான மருத்துவ மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும், ஏனெனில் ஆரம்பகால நோயறிதல் பயனுள்ள மேலாண்மைக்கும் நோய் பாதிப்பு தீவிரமாவதை குறைக்க அல்லது தடுக்க முக்கியமாகும். எனவே 8 வாரங்களுக்கு மேல் நீடிக்கும் தொடர்ச்சியான இருமல் இருந்தால் அது துவக்கநிலை COPD-ஆக இருக்கிறதா என்பதை சரிபார்க்க மருத்துவரை அணுக வேண்டும். அறிகுறிகள் அதிகரித்து சிக்கலாகாமல் தடுக்க, நீண்டகால நுரையீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் உடனடி நோயறிதல் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவது அவசியம்.