ரஞ்சி கோப்பை தொடரில் ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா
சௌராஷ்டிரா - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஷுப்மன் கில் பஞ்சாப் அணிக்காகவும், ரவீந்திர ஜடேஜா சௌராஷ்டிரா அணிக்காகவும் விளையாடவுள்ளனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முடிவில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதன் மூலம் 37 ஆண்டுகளில் முதல் முறையாக நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
இதனையடுத்து இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை மறுநாள் (ஜனவரி 21) முதல் நடைபெறவுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இவ்விரு அணிகளும் எதிர்கொள்ளும் தொடர் என்பதால், இரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சிகளில் இறங்கியுள்ளனர்.
அதே சமயம் நியூசிலாந்து டி20 தொடரில் இடம் பெறாத வீரர்கள், தற்சமயம் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் விளையாட தங்களின் கவனத்தை திருப்பியுள்ளனர். அந்தவகையில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகளானது ஜனவரி 22ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் தான் தற்சமயம் இரண்டாம் கட்ட போட்டிகள் தொடங்கவுள்ளன. இதில் டி20 அணியில் இடம் பெறாத இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ஷுப்மன் கில், தனது மாநில அணியான பஞ்சாப்பிற்காக விளையாடவுள்ளார். அதன்படி அவர் சௌராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக இன்றைய தினம் ராஜ்கோட் வந்தடைந்துள்ளார்.
தற்போதைய ரஞ்சி கோப்பை தொடரில் எலைட் பி பிரிவில் இடம் பிடித்துள்ள பஞ்சாப் அணி விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது. இதனால் அந்த அணி எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும் என்பதால், ஷுப்மன் கில்லின் வருகை அந்த அணிக்கு பலத்தை கூட்டியுள்ளது.
அதேசமயம் இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜாவும், ரஞ்சி கோப்பை தொடரில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடவுள்ளார். அவர் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடுவார் என்பதை சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க தலைவர் ஜெய்தேவ் ஷா உறுதி படித்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஜெய்தேவ் ஷா, "ரவீந்திர ஜடேஜா எங்களைத் தொடர்புகொண்டு, ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள பஞ்சாபிற்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். மற்ற போட்டிகளில் அவர் விளையாடுவது குறித்து இதுவரை எங்களுக்கு எதுவும் தெரியாது, ஆனால் பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் அவர் நிச்சயமாக விளையாடுவார். அந்தப் போட்டிக்குப் பிறகு அவர் என்ன முடிவு எடுப்பார் என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.