பனி மூட்டத்தால் நிகழ்ந்த சோகம்!. சாலை விபத்துகளில் 25 பேர் பலி!
பாகிஸ்தானில் கடும் பனி மூட்டம் காரணமாக ஏற்பட்ட சாலை விபத்துக்களில் 25 பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரை சேர்ந்த குடும்பத்தினர், உறவினர்கள் 23 பேர் நேற்று மாலை பஞ்சாப் மாகாணம் பைசலாபாத்தில் உறவினரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க லாரியில் சென்றுள்ளனர். இந்தநிலையில் கடும் பனி மூட்டம் காரணமாக முக்கிய சாலைகள் மூடப்பட்டிருந்ததால் லாரி ஓட்டுநர் உள்ளூர் சாலை வழியாக சென்றுள்ளார்.
பஞ்சாப் மாகாணம் சர்கோதா மாவட்டம் கோட் மாமின் பகுதியில் உள்ள பாலத்தின் மேல் சென்றக்கொண்டிருந்தபோது இன்று அதிகாலை ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பாலத்தின் தடுப்புகளில் மோதி கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் பயணித்த 6 குழந்தைகள் உள்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் 9 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், உயிரிழந்த 14 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உறவினரின் இறுதிச்சடங்கிற்கு சென்று லாரி விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல், பலுசிஸ்தானில் உள்ள குவாடர் அருகே மக்ரான் கடற்கரை நெடுஞ்சாலையில் ஒரு பயணிகள் பெட்டி கவிழ்ந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்தனர், மேலும் 36 பேர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதேபோல், இந்த வார தொடக்கத்தில் தேரா இஸ்மாயில் கானில் சர்க்கரை நிரப்பப்பட்ட டிரெய்லரும் பயணிகள் வேனும் மோதியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர்.