EPS-க்கு ஷாக்!. கூண்டோடு திமுகவில் இணைந்த அதிமுகவினர்!
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சித் தாவல்கள் நிறைய நடைபெறுகின்றன. அந்த வகையில் அதிமுகவில் இருந்து திமுக, தவெகவுக்கும், திமுகவில் இருந்து அதிமுக, தவெகவுக்கும், தவெகவில் இருந்து அதிமுக, திமுகவுக்கும் மாறி மாறி கட்சித் தாவல்கள் நடக்கின்றன. அந்த வகையில் நேற்றைய தினம் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் திமுக தலைவர் ஸ்டாலின்முன்னிலையில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் பிச்சை, எம்.முத்துராமன், நகர அம்மா பேரவை தலைவர் கண்ணன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர். இதன் பின்னணியில் திமுகவில் ஐக்கியமான அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். அவர் அதிமுகவில் அதிருப்தியில் இருப்பவர்களுடன் பேசி அவர்களை தவெக பக்கம் கொண்டு வருகிறார். இவர்தான் ஜேசிடி பிரபாகரனை அழைத்து வந்ததாக சொல்லப்படுகிறது. பொங்கல் முடிந்ததும் நிறைய பேர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைவார்கள் என செங்கோட்டையன் தெரிவித்து வருகிறார்.
அது போல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தவெகவுடன் கூட்டணி வைக்கிறதோ இல்லையோ, அந்த கட்சியில் இருந்து நிறைய பேர் தவெகவில் இணைவதாகவும் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.