ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த செலென்ஸ்கி தயாராக இல்லை: டிரம்ப் காட்டம்
ரஷ்யா உடனான போரை முடிவுக்கு கொண்டுவர, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி தயாராக இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
பிப்ரவரி 24, 2022 அன்று ரஷ்யா-உக்ரைன் இடையே தீவிர போர் தொடங்கியது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இந்த போரை முடிவுக்கு கொண்டுவர, திருத்தப்பட்ட 19 அம்சங்கள் அடங்கிய அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்தார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், அமைதி ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கும் சில பகுதிகள் தங்களுக்கு எதிராக இருப்பதாக செலென்ஸ்கி கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு தடங்கல் ஏற்படுத்துவதாக டிரம்ப் விமர்சித்துள்ளார். போரை முடிவுக்கு கொண்டுவரும் அமைதி ஒப்பந்தம் மீது, 3 நாட்கள் பேச்சுவார்த்தை முடிவடைந்தும், அதில் பெரிதாக முன்னேற்றங்கள் ஏற்படாமல் இருக்கும் நிலையில் இந்த கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார்.
மனமில்லாமல் இருக்கும் செலென்ஸ்கி
தன் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கும் டிரம்ப், “அதிபர் செலென்ஸ்கி இன்னும் அந்த அமைதி ஒப்பந்தத்தை சரியாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன். அது எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அவரது மக்கள் அதை விரும்புகிறார்கள். ஆனால் அவர் அதை இன்னும் படிக்கவில்லை” என்று கென்னடி மையத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்பதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மக்கள் அமைதி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை ஆதரிக்கும் நிலையில், செலென்ஸ்கி மட்டும் அதற்கு இசைவு தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறி டிரம்ப் இவ்வாறான கருத்தை பதிவு செய்துள்ளார்.
மேலும், ரஷ்யா இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளிப்பதாக கூறிய அவர், “அவர்கள் தயாராக இருக்கும் நிலையில், உக்ரைன் அதிபர் மட்டும் இன்னும் தயாராகவில்லை என்றால், போர் எப்படி முடிவுக்கு வரும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும், கடந்த வார பேச்சுவார்த்தையின் போது, அமைதி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள சில அம்சங்களில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என ரஷ்ய அதிபர் புடின் கூறியிருந்தார். டிரம்ப் கொண்டு வந்துள்ள சில அம்சங்கள் செயல்படுத்த முடியாதவை எனவும் அவர் விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கிடையில், ஃப்ளோரிடாவில் உக்ரேனிய தூதுக்குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அமெரிக்க அதிகாரிகளுடன் தான் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசியதாக கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 7) செலென்ஸ்கி தெரிவித்திருந்தார். மேலும், தங்கள் நாட்டில் அமைதியை நிலைநாட்ட, அமெரிக்காவுடன் தொடர்ந்து பணியாற்ற உக்ரைன் தயாராக உள்ளது என்றும் தனது ஒரு சமூக வலைத்தள பதிவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அமைதி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
அமெரிக்க முன்மொழிந்துள்ள அமைதி ஒப்பந்தத்தில், கிரிமியா, லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் ஆகிய பகுதிகளை ரஷ்யாவிடம் உக்ரைன் ஒப்படைக்க வேண்டும் என்ற முக்கிய அம்சம் இடம்பெற்றுள்ளது. அதேபோல, எக்காலத்திலும் உக்ரைன் நேட்டோவில் சேராது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற ஆணையும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.
மேலும், உக்ரைன் ராணுவத்தின் பலத்தை குறைக்க வேண்டும், ரஷ்யாவை ஜி8 குழுவில் சேர்க்க மீண்டும் அழைப்பு விடுக்கப்படும்; முறையே ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகள் படிப்படியாக நீக்கப்படும், முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களில் சுமார் 90,000 கோடி ரூபாய் (100 பில்லியன் டாலர்) உக்ரைனில் மறுசீரமைப்பு பணிகளுக்காக முதலீடு செய்யப்படும் என்பன ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக உள்ளன.
குறிப்பாக, போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்குவதுடன், உக்ரைனில் 100 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் இருதரப்பும் ஏற்றுக்கொண்டால், ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் நிறுத்தப்படும்.