குளிர்காலத்தில் எப்போதும் சோர்வா இருக்கா? காலையில் இதை பண்ணா ஆக்டிவா இருப்பீங்க!

குளிர்காலத்தில் எப்போதும் சோர்வா இருக்கா? காலையில் இதை பண்ணா ஆக்டிவா இருப்பீங்க!

குளிர்காத்தில் போர்வையை போர்த்திக்கொண்டு தூங்குவது ஒரு சுகம் தான். ஆனால், வழக்கத்தைவிட குளிர்காலத்தில் அதிக சோர்வாகவும், எந்த வேலையிலும் நாட்டமில்லாமலும் இருப்பது போல் தோன்றுகிறதா? உண்மையில், குறைந்த பகல் வெளிச்சம், அதிக குளிர் மற்றும் சூரிய ஒளியின் பற்றாக்குறை ஆகியவை உடலின் ஆற்றல் மட்டத்தை பாதித்து ஆர்வத்தை இழக்க செய்யும்.

குளிர்காலத்தில் நாள் முழுவதும் தூக்க கலக்கத்துடன் இருப்பது, சோம்பேறியாக உணர செய்வதற்கு பின்னால் உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதுமட்டுமல்லாமல், தினசரி பழக்கவழக்கத்தில் சில மாற்றத்தை செய்வதன் மூலம் ஆற்றலை அதிகரிக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

சோர்வாக உணர்வதற்கு காரணம்?

குறைவான சூரிய ஒளி: குளிர்காலத்தில் பகல் நேரம் குறைவதால், சூரிய ஒளி வெளிப்பாடு குறைகிறது. சூரிய ஒளி தான் நாம் எப்போது தூங்க வேண்டும், எப்போது விழித்திருக்க வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தும் நம் உட்புற உடல் கடிகாரமான (Internal Body Clock) சர்க்காடியன் தாளத்தை ஒழுங்குபடுத்துகிறது.

வெளிச்சம் குறையும்போது, உடல் தானாகவே அதிக மெலடோனின் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இது தூக்கத்தை வரவழைக்கும் ஹார்மோன் ஆகும். இதன் விளைவாக, பகல் முழுவதும் மந்தமாகவும் தூக்கமாகவும் உணர்கிறோம். போதிய இயற்கை ஒளி கண்களில் படாததால், நம் உடல் கடிகாரம் குழப்பமடைந்து, பகலில் தூக்கமாகவும், இரவில் அமைதியின்மையுடனும் இருக்க வழிவகுக்கிறது.

வைட்டமின் D குறைபாடு: சூரிய ஒளியின் மூலம் தோல் வைட்டமின் D-ஐ உற்பத்தி செய்கிறது. குளிர்காலத்தில், பகல் நேரம் குறைவாக இருப்பதாலும், அதிக கனமான ஆடைகளை அணிவதாலும் சூரிய ஒளி வெளிப்பாடு குறைந்து, வைட்டமின் D அளவு கணிசமாகக் குறைகிறது. வைட்டமின் D குறைபாடு சோர்வு, தசை பலவீனம் மற்றும் பருவகால பாதிப்புக் கோளாறு (Seasonal Affective Disorder) போன்ற மனச்சோர்வு அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.

மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்: குளிர்காலத்தில் உடல் மட்டுமன்றி மனநிலையும் சோர்வடையலாம். குறைந்த சூரிய ஒளி, மகிழ்ச்சி மற்றும் கவனத்தை அதிகரிக்கும் செரோடோனின் எனப்படும் நரம்புக்கடத்தியின் அளவைப் பாதிக்கிறது. செரோடோனின் அளவு குறையும்போது, மனச்சோர்வுடனும் மந்தமாகவும் உணர நேரிடுகிறது.

கோப்புப்படம்

சோர்வை போக்க வழி உள்ளதா?

  • காலையில் எழுந்த ஒரு மணி நேரத்திற்குள் ஜன்னல்களை திறந்து வைக்கவும் அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இது மூளைக்கு நாள் தொடங்கிவிட்டது என்பதை உணரச் செய்து, சர்க்காடியன் தாளத்தை மீட்டமைக்கும்.
  • தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, செரோடோனின் அளவை அதிகரித்து, மனநிலையை உற்சாகப்படுத்தும். சிறிய உடற்பயிற்சிகள் கூட சோர்வை போக்க உதவும்.
  • அதிக கார்போஹைட்ரேட் நிறைந்த கனமான உணவுகளைத் தவிர்த்து, மெதுவாக ஆற்றலை வெளிப்படுத்தும் ஓட்ஸ், பயறு, முட்டை, பச்சை காய்கறிகள் போன்ற சமச்சீரான உணவுகளைச் சாப்பிடுங்கள். நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம்.
  • தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வதும், எழுந்திருப்பதும் உடல் கடிகாரத்தைச் சீராக வைத்து, ஆற்றல் மட்டத்தை நிலைநிறுத்த உதவும்.