BREAKING: தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகம், புதுச்சேரியில் நாளை (நவ.29) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாளை கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்றும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல்வேறு மாவட்ட அரசு நிர்வாகங்களும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டு வந்தன. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் முன்பு வெளியிடப்பட்ட அட்டவணை மீண்டும் வெளியிடப்பட்டது. அதில், ஏற்கெனவே அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, நாளை சனிக்கிழமை என்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு, அரசு நிதியுதவி பள்ளிகளுக்கும் விடுமுறை என கூறப்பட்டுள்ளது.
இதேபோல் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் எதையும் நாளை நடத்தக்கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.
புதுச்சேரி அரசு வெளியிட்ட அறிவிப்பில், நாளை அனைத்து பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.