WPL 2026: 2-வது போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் - யார் இந்த நந்தினி சர்மா?

WPL 2026: 2-வது போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் - யார் இந்த நந்தினி சர்மா?

மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடர் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது வீராங்கனை என்ற பெருமையை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நந்தினி சர்மா பெற்றுள்ளார்.

இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் மகளிர் பிரீமியர் லீக் என்ற டி20 தொடரை பிசிசிஐ தொடங்கி நடத்தி வருகிறது. மொத்தம் 5 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரில், இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு முறையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.

இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நான்காவது சீசன் கடந்த 9 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 5 லீக் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில், பல்வேறு சாதனைகளும் முறியடிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மகளிர் பிரீமியர் லீக்கில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது வீராங்கனை என்ற பெருமையை நந்தினி சர்மா பெற்றுள்ளார்.

மகளிர் பிரீமியர் லீக் தொடர் வரலாற்றில் இதற்கு முன்பு ஈஸி வோங் (மும்பை இந்தியன்ஸ்), கிரேஸ் ஹாரிஸ் (யுபி வாரியர்ஸ்) மற்றும் தீப்தி சர்மா (யுபி வாரியர்ஸ்) ஆகியோர் மட்டுமே ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஈஸி வோங், கடந்த 2023 ஆம் ஆண்டு யுபி வாரியர்ஸுக்கு எதிரான போட்டியின் போது ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

யார் இந்த நந்தினி சர்மா?

சண்டிகரைச் சேர்ந்தவர் வேகப்பந்து வீச்சாளர் நந்தினி சர்மா. இவர் உள்நாட்டு டி20 கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், 2026 ஆம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகள் ஏலத்தில் ரூ.20 லட்சத்திற்கு டெல்லி அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் கவனம் ஈர்த்த நந்தினி சர்மா, தனது இரண்டாவது போட்டியிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதன் மூலம் மகளிர் பிரீமியர் லீக் தொடர் வரலாற்றில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.