இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்: கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்
மெல்போர்ன் டெஸ்ட் போட்டி இரண்டே நாளில் முடிவடைந்ததன் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.60 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதுடன், நடப்பு ஆஷஸ் டெஸ்ட் தொடரிலும் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இது தவிர்த்து 15 ஆண்டுகளுக்கு பிறகு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தங்களுடைய முதல் வெற்றியையும் பதிவு செய்தது.
இந்த போட்டியின் முடிவு இங்கிலாந்தை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தாலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய போட்டியாக மாறியுள்ளது. ஏனெனில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியானது இரண்டு நாள்களுக்கு முடிவடைந்ததே, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இழப்பிற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அதன்படி, போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை காண கிட்டத்திட்ட 94 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் வந்திருந்தனர். இதன் மூலம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதான வரலாற்றில் அதிக ரசிகர்களைக் கொண்ட போட்டியாகவும் இது பார்க்கப்பட்டது. முன்னதாக 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் 93 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் போட்டியை காண வந்திருந்தனர்.
அதுவே இதுநாள் வரையிலும் சாதனையாக இருந்த நிலையில், அதனை இந்த போட்டி முறியடித்து அசத்தியது. அதேபோல் இரண்டாம் நாள் ஆட்டத்திலும் ரசிகர்களின் கூட்டம் அலை மோதியது. இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை சுக்கு நூறாக்கும் விதமாக இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இரண்டு நாளில் முடிவடைந்தது.
இதன் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு இந்திய மதிப்பில் கிட்டத்திட்ட ரூ.60 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஏற்கெனவே முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளும் 3 நாட்களுக்குள் முடிவை எட்டியது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு இழப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்சமயம் மெல்போர்ன் டெஸ்டும் இரண்டு நாளில் முடிவடைந்து அவர்களை பெரும் நிதி நெருக்கடிக்கு தள்ளியுள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 152 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், அதனைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியும் முதல் இன்னிங்ஸில் 110 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 42 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
பின்னர் தொடங்கிய இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி பேட்டர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததுடன், ரன்களையும் சேர்க்க தவறினர். இதனால் அந்த அணி 132 ரன்களில் சுருண்டதுடன், இங்கிலாந்துக்கு 175 ரன்கள் என்ற இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொதப்பிய நிலையிலும், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.