லா லிகா 2025: ரியல் மாட்ரிட்டிற்கு அதிர்ச்சி கொடுத்த செல்டா விகோ!
செல்டா விகோ அணிக்கு எதிரான லா லிகா தொடரின் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.
ஸ்பெய்னின் புகழ் பெற்ற கால்பந்து தொடரான லா லிகா தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியை எதிர்த்து செல்டா விகோ அணி பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக செயல்பட்டதுடன், எதிரணியின் கோலடிக்கும் வாய்ப்புகளையும் முறியடித்தன.
இதன் காரணமாக முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணியும் கோல்கள் ஏதுமின்றி சமனிலையில் இருந்தன. பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட செல்டா விகோ அணிக்கு ஆட்டத்தின் 54ஆவது நிமிடத்தில் வில்லியட் ஸ்வெட்பர்க் மூலம் முதல் கோலானது கிடைத்தது. மறுபக்கம் ரியல் மாட்ரிட் அணியானது கோலடிக்கும் வாய்ப்புகளை வீணடித்தது.
அதன்பின் இரண்டாம் பாதி ஆட்டத்தில் கூடுதல் நேரமான 90+3ஆவது நிமிடத்திலும் வில்லியட் கோலடித்ததுடன் அணியின் வெற்றியையும் உறுதி செய்தார். அதேசமயம் இறுதிவரை போராடிய ரியல் மாட்ரிட் அணியால், எதிரணியின் டிஃபென்ஸைத் தாண்டி ஒரு கோலைக் கூட பதிவு செய்ய முடியவில்லை. இதன் மூலம் ஆட்டநேர முடிவில் செல்டா விகோ அணி 2-0 என்ற கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் செல்டா விகோ அணி 19 புள்ளிகளுடன் பட்டியலின் 10ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் ரியல் மாட்ரிட் அணிக்கு இத்தொடரில் இது இரண்டாவது தோல்வியாக அமைந்துள்ளது. அந்த அணி விளையாடிய 16 போட்டிகளில் 11 வெற்றி, 2 தோல்வி, 3 டிரா என மொத்தமாக 36 புள்ளிகளைப் பெற்று பட்டியலின் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.