'ஜனநாயகன்' தணிக்கை சான்றிதழ் விவகாரம்; ஜன.15இல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
'ஜனநாயகன்' சென்சார் தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 15ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து, ஏற்கனவே படத்தில் சில காட்சிகளை நீக்கியதால் UA 16+ சான்றிதழ் வழங்க முடிவு செய்த பின்பு, மறு ஆய்வு குழுவுக்கு படத்தை அனுப்ப வேண்டும் என்ற தணிக்கை தலைவர் முடிவை எதிர்த்து படக்குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், படத்தை பார்வையிட்ட ஆய்வு குழு உறுப்பினர்களில் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப தணிக்கை வாரிய தலைவர் பரிந்துரை செய்தார். தன்னிச்சையாக முடிவு செய்ய தணிக்கை வாரிய தலைவருக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஏற்கனவே போதுமான மாறுதல்களுக்கு பின் UA 16+ சான்றிதழ் வழங்க முடிவு செய்த நிலையில், மீண்டும் மறு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்ற வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உடனடியாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தணிக்கை வாரியம் பதிலளிக்க போதுமான அவகாசம் தராமல் தீர்ப்பு வழங்கியது தவறு என தெரிவித்து தனி நீதிபதி உத்தரவுக்கு (ஜன.9) இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, படக்குழு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தனிக்கை வாரியம் சார்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜன.13) வழக்கு பட்டியலிடப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. அதனால், எப்போது வழக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜனவரி 19ம் தேதி பட்டியலிடப்படுவதாக முதலில் தகவல்கள் வெளியானது. பின்னர், ஜனவரி 15ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.